இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) ஒரு தரக்குறைப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று புதன்கிழமை (30) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, நடுவரின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட காரணத்தால் இவரை ஐசிசி கண்டித்துள்ளது.
பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளருக்கு உபாதை
இலங்கை அணியின் 26வது ஓவரை வனிந்து ஹஸரங்க வீசியபோது, நஜிபுல்லாஹ் ஷர்டானுக்கு எதிராக LBW ஆட்டமிழப்பொன்றை வனிந்து ஹஸரங்க கோரினார். இலங்கை அணியின் மேன்முறையீட்டின்படி ஆராய்ந்த மூன்றாவது நடுவர், பந்து துடுப்பாட்ட வீரரின் கையுறையில் படுவதாக தெரிவித்து ஆட்டமிழப்பு அல்ல என அறிவித்தார்.
இதன்காரணமாக சற்று கோபமடைந்த வனிந்து ஹஸரங்க நடுவரின் தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், ஐசிசியின் விதிமுறைகளை மீறும் வகையில் மைதானத்தில் நடந்துக்கொண்டார்.
எனவே போட்டி நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்களுக்கு மத்தியிலான விசாரணையில் வனிந்து ஹஸரங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஒரு தரக்குறைப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
வீரர் ஒருவர் 24 மாத காலப்பகுதியில் 4 தரக்குறைப்பு புள்ளிகளை பெறுவாராயின் அது, ஒரு இடைநீக்க புள்ளியாக மாறும். இதில் இரண்டு இடைநீக்க புள்ளிகளை ஒரு வீரர் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகள் அல்லது 2 T20I போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<