பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வு அறிவிப்பை மீளப் பெற்ற வனிந்து ஹஸரங்கவிற்கு, பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆட தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வனிந்து ஹஸரங்க!
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தின் போது 37ஆவது ஓவரில் வனிந்து ஹஸரங்க மைதான நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக நடுவருடன் முரண்பட்டிருந்தார்.
பின்னர் போட்டி நடுவர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ICC) வனிந்து ஹஸரங்கவின் செயற்பாடு குறித்து முறைப்பாடு மேற்கொண்டதனை அடுத்து, ஹஸரங்க ICC இன் வீரர்கள் விதிமுறைக்கோவை 2.8 இற்கு அமைய குற்றவாளியாக இனம் காணப்பட்டிருந்தார்.
எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஓய்வு அறிவிப்பை மீளப்பெற்ற ஹஸரங்கவிற்கு தற்போது பங்களாதேஷ் அணியுடன் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆட தடை வழங்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை ஹஸரங்க மேற்கொண்ட குற்றத்திற்காக பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போட்டிக்கட்டணத்தில் 50% அபாரதமும் விதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வனிந்து ஹஸரங்க பங்களாதேஷ் தொடருக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்றிருந்த ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் போட்டி நடுவர் உடன் முரண்பட்டமைக்காக தடையினைப் பெற்றிருந்ததோடு, அது அவருக்கு பங்களாதேஷ் T20I தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பினையும் இல்லாமல் செய்திருந்தது.
இதேவேளை வனிந்து ஹஸரங்கவிற்கு அவர் மேற்கொண்ட குற்றங்களுக்காக கடந்த 24 மாதங்களில் மொத்தமாக 8 தரநிலை விதிமீறல் புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை A – ஆப்கான் A தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!
அதேவேளை பங்களாதேஷ் ஒருநாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட குசல் மெண்டிஸிற்கும் மூன்றாவது போட்டிக்கான அவரது ஊதியத்தில் 50% அபாரதமாக வழங்கப்பட்டிருக்கின்றது. குசல் மெண்டிஸ் ஒருநாள் தொடர் நிறைவுக்குப் பின்னர் மைதான நடுவர்களுடன் நடந்து கொண்ட விதத்திற்காக குறித்த அபாரதம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த விடயம் குறித்து மேலும் கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் குசல் மெண்டிஸ் ஒருநாள் தொடரின் நிறைவின் பின்னர் போட்டி நடுவர்களுடன் கைகுலுக்கும் போது அவர்களை கடிந்து கொண்டமைக்காக அபாரதத்தினைப் பெற்றதாக கூறப்படுகின்றது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரினை பங்களாதேஷ் 2-1 எனக் கைப்பற்றியதோடு, அடுத்ததாக இரு அணிகளும் பங்கெடுக்கும் டெஸ்ட் தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) தொடக்கம் சில்லேட்டில் ஆரம்பமாகவிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<