பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரின் புதிய வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த நட்சத்திர சகலதுறைவீரர் வனிந்து ஹஸரங்க மற்றும் அதிரடி துடுப்பாட்டவீரர் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு
எட்டாவது முறையாக 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று (15) நிறைவடைந்திருந்தது. அதன்படி இந்த வீரர்கள் ஏலத்திலேயே இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான பானுக்க ராஜபக்ஷ மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
மொத்தம் ஆறு அணிகள் பங்கெடுக்கும் இந்த தொடரில் பிளாட்டினம் (Platinum) பிரிவில் வனிந்து ஹஸரங்கவினை குவேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி கொள்வனவு செய்ய, பானுக்க ராஜபக்ஷ பெசாவர் ஷல்மி அணி மூலம் அதே பிரிவில் வாங்கப்பட்டிருந்தார்.
அதேநேரம் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான டேவிட் மில்லர், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் ஏலத்தின் போது கொள்முதல் செய்யப்பட்டிருந்தனர். இந்த வீரர்களில் டேவிட் மில்லர் முல்டான் சுல்தான்ஸ் அணியினாலும், இஸ்லமாபாத் யூனைடட் அணி அலெக்ஸ் ஹேல்ஸினையும் கொள்முதல் செய்திருந்தது.
மறுமுனையில் அவுஸ்திரேலிய விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான மெதிவ் வேட் கராச்சி கிங்ஸ் அணி மூலமும், ஆப்கான் அதிரடி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் இஸ்லமாபாத் யூனைட்டட் அணி மூலமும் வாங்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை தென்னாபிரிக்க சுழல் வீரரான இம்ரான் தாஹிர் கராச்சி கிங்ஸ் அணி மூலமும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறைவீரரான ரொவ்மன் பவல் பெஷாவர் ஷல்மி அணி மூலமும், ஜிம்பாப்வே அணியின் சகலதுறை நட்சத்திரம் சிக்கந்தர் ரஷா லாஹூர் கலந்தர்ஸ் அணி மூலமும் கொள்வனவுக்கு உள்ளாகியிருந்தனர்.
அத்துடன் துணைவீரர்களுக்கான (Supplementary) பிரிவிலும் சர்வதேச அளவிலான நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர். அந்தவகையில் இஸ்லாமபாத் யூனைட்டட் அணி இங்கிலாந்தின் மொயின் அலியினை கொள்வனவு செய்ய, பெஷாவர் ஷல்மி அணி நியூசிலாந்தின் ஜிம்மி நீஷத்தினையும், குவேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி மார்டின் கப்டிலையும் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சச்சினைப் போல அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்த அர்ஜுன்
பாகிஸ்தான் வீரர்களை நோக்கும் போது முக்கிய கொள்வனவுகளாக அதன் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அதிரடி துடுப்பாட்டவீரர் பக்கார் சமான் லாஹூர் கலந்தர்ஸ் அணி மூலமும், குவேட்டா கிளேடியேட்டர்ஸ் அணி இளம் வேகப்பந்துவீச்சாளர் நஸீம் சாஹ்வினையும், அஹ்சன் அலியினையும் கொள்முதல் செய்திருந்ததனை குறிப்பிட முடியும்.
அதேவேளை எட்டாவது பருவகாலத்திற்கான PSL T20 தொடர் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி தொடக்கம், மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<