இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிக் கட்டம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று(08) ஆரம்பமாகியது.
அண்மைக்காலமாக தேசிய திறந்த மட்ட மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை வீரர்கள், வழமை போன்று இம்முறை நடைபெறும் சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொள்ளவில்லை. எனினும் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் கலந்துகொண்டு வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக இம்முறை 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள்
33 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை…
இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன் ராஜ் வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
யாழ். ஹார்ட்லி கல்லூரிக்காக அண்மைக்காலமாக மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற மிதுன் ராஜ், கடந்த மாதம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக 16 வயதுக்குட்படட ஆண்களுக்கான குண்டு போடுதலில் கலந்துகொண்டு, 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து தனது கடைசி ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இம்முறை பங்கேற்றுள்ள மிதுன் ராஜ், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் கலந்துகொண்டு 13.42 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
எனினும், கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் முதற்தடவையாகக் கலந்துகொண்டு உயரம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை வென்ற மிதுன் ராஜ், அக்கல்லூரிக்காக உயரம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த முதல் வீரராகவும் இடம்பிடித்தார். எனினும், குறித்த தொடரில் தட்டெறிதல் போட்டியில் 5ஆவது இடத்தையே அவரால் பெற முடிந்தது.
இந்நிலையில் மிதுன் ராஜ், கலந்துகொள்ளவுள்ள தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளன.
சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரின் இறுதிக்கட்டம் தியகமவில்
சேர். ஜோன் டாபர்ட் பாடசாலைகள் மெய்வல்லுனர் தொடரின் கனிஷ்ட…
இதேவேளை, ஈட்டி எறிதல் போட்டியில் அதிக கவனத்தை செலுத்தி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மிதுன் ராஜ், கடந்த மாதம் நடைபெற்ற 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு, 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியில், 13.74 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த சனுப குர்ரே தங்கப் பதக்கத்தையும், 13.73 மீற்றர் தூரம் எறிந்த ரக்வானை – ரத்னாலோக மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நிமன்த எதுரங்க வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.