இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக மகளிர் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் சபை, எமது இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளது.
SLC T20 லீக் பணிப்பாளராக சஜித் பெர்னாண்டோ நியமனம்
இலங்கை கிரிக்கெட்…
மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ஹேமந்த தேவப்பிரிய தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஜுன் மாதம் பதவி விலகியதனை தொடர்ந்து அவரின் இடத்துக்கு ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹேமந்த தேவப்பிரியவின் பயிற்றுவிப்பின் கீழ் விளையாடிய இலங்கை மகளிர் அணி கடுமையான விமர்சனங்களுக்கு கடந்த காலங்களில் முகங்கொடுத்திருந்தது. இறுதியாக நடைபெற்ற மகளிருக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை மகளிர் அணி, தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளிடம் படுதோல்வியை சந்தித்திருந்தது. இதனால் தேவப்பிரியவின் பயிற்றுவிப்பு தொடர்பில் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அவரின் இடத்துக்கு ஹர்ச டி சில்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்ச டி சில்வா கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார். இந்த காலப்பகுதியில் இலங்கை அணி மகளிர் உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளை வீழ்த்தி, 5ஆவது இடத்தை பிடித்திருந்தது. இதுவே, இலங்கை மகளிர் அணியின் சிறந்த உலகக்கிண்ண தொடராகவும் இதுவரையில் அமைந்துள்ளது.
பின்வரிசை துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க எத்தனிக்கும் தனன்ஜய டி சில்வா
ஹர்ச டி சில்வா புனித ஜோசப் கல்லுரியின் பயிற்றுவிப்பாளராக தசாப்தத்திற்கு மேல் பணியாற்றியுள்ளதுடன், தற்போது இலங்கை அணியில் விளையாடி வரும் அணித் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ், திமுத் கருணாரத்ன, திசர பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
தேசிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஹர்ச டி சில்வா விளையாடவில்லை என்பதுடன், மூன்றாம் தர பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள உள்ளூர் கழகங்களுக்கு பயிற்சி அளித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.