தனிப்பட்ட காரணங்களினால் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஹெரி ப்ரூக் விலகியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது. மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சம்பியஷிப் தொடரின் முக்கிய அங்கமாக இருக்கும் என்பதால் இத்தொடரின் மீதான எதிபார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கு தயாராகும் விதமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று (21) ஹைதராபாத்தை வந்தடைந்தனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் இளம் சகலதுறை வீரரான ஹெரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஹெரி ப்ரூக் விலகியுள்ளார். அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள மாட்டார். அவருக்கான மாற்று வீரரை விரைவில் இங்கிலாந்து தேர்வுக் குழு அறிவிக்கும்‘ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- தேசிய கிரிக்கெட் அகடமியில் பதவியை துறந்த மிக்கி ஆர்தர்
- பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் பதவியில் இருந்து விலகிய அஷ்ரப்
கடந்த 2022ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஹெரி ப்ரூக். முன்னதாக இவர் கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள 24 வயதான ஹெரி ப்ரூக், 4 சதங்கள் மற்றும் 7 அரைச் சதங்களுடன் 1181 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதனிடையே, ஹெரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லோரன்ஸை இந்திய தொடருக்காக இங்கிலாந்து அணி தேர்வுசெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அவர் இங்கிலாந்து அணியுடன் இணைவார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான் லோரன்ஸ் இங்கிலாந்துக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 அரைச் சதங்களுடன் 551 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<