அவுஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

Australia tour of Pakistan 2022

270

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான 16 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் ஹரிஸ் ரஹூப் மற்றும் ஷான் மக்சூட் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

>>ஐ.சி.சி. இன் மாதத்திற்குரிய சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்குரிய பரிந்துரையில் சமரி அத்தபத்து

ஹரிஸ் ரஹூப் இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவர், சுழல் பந்துவீச்சாளர் பிலால் அஷிப்புக்கு பதிலாக இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஷான் மக்சூட், அபிட் அலிக்கு பதிலாக இணைக்கப்பட்டுள்ளார். அபிட் அலி சிசிச்சைகளை பெற்று, உடல் குணமடைந்துவருவதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அனுபவ சுழல் பந்துவீச்சாளரான யசீர் ஷா, நஷீம் ஷா மற்றும் மொஹமட் அபாஷ் ஆகியோருடன் மேலதிக வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் அணித்தலைவராக பாபர் அஷாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவராக மொஹமட் ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான அஷார்  அலி, இமாம் உல் ஹக் மற்றும் பவட் அலாம் ஆகியோரும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஷயீன் ஷா அப்ரிடி, சுழல் பந்துவீச்சாளர் நவுமான் அலி, ஹஸன் அலி மற்றும் ஷஹீட் மஹ்மூட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குழாம் – பாபர் அஷாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான் (உப தலைவர்), அப்துல்லாஹ் சபீக், அஷார் அலி, பஹீம் அஷ்ரப், பவட் அலாம், ஹரிஸ் ரஹூப், ஹஸன் அலி, இமாம்-உல்-ஹக், மொஹமட் நவாஸ், நவுமான் அலி, சஜிட் கான், சஹாட் சகீல், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மக்சூட், ஷஹிட் மஹ்மூட்

மேலதிக வீரர்கள் : கம்ரன் குலாம், மொஹமட் அபாஸ், நஷீப் ஷா, சர்பராஸ் அஹ்மட், யசீர் ஷா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<