பாகிஸ்தான் அணியின் துரித வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹரிஸ் ரவுப் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறும் லியம் லிவிங்ஸ்டன்!
ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது ஹரிஸ் ரவூப் தசை உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.
அதன்படி இந்த உபாதையின் பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹரிஸ் ரவூப் களத்தடுப்பில் ஈடுபடுவதனையும் தவிர்த்திருந்தார். அத்துடன் அவர் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்துவீசியிருக்கவில்லை.
ஆனால் பாகிஸ்தான் அணிக்காக இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பாடிய அவர், MRI பரிசோதனைகளை அடுத்து இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பங்கெடுக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கெடுக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஹரிஸ் ரவூப் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கெடுப்பதிலும் சந்தேகம் நிலவுவதாக கூறப்பட்டிருக்கின்றது.
ஹரிஸ் ரவுப் இல்லாத நிலையில் பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொஹமட் வஸீம் ஜூனியருக்கு வாய்ப்பு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> LPL தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?
இதேநேரம் ஹரிஸ் ரவூப் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகும் பட்சத்தில் பாகிஸ்தான் தமது அணிக் குழாத்திற்குள் ஹசன் அலி அல்லது மொஹமட் அப்பாஸ் ஆகிய இருவரில் ஒருவரினை இணைப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
அதேவேளை பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) முல்டான் நகரில் ஆரம்பமாகுகின்றது. இதேவேளை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<