இந்த ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான அஜிங்கியா ரஹானே, புஜாரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
அதேபோல, அக்ஷர் படேல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் C பிரிவில் இருந்து B பிரிவிற்கு முன்னேறியுள்ளனர். இதுதவிர, அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஸ்ரேயாஸ் அய்யரும் B பிரிவில் இடம்பெற்றுள்ளார்.
அத்துடன், இளம் வீரர் சூர்யகுமார் யாதவ்வும் முதல்முறையாக பிசிசிஐ இன் வருடாந்த ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தம் பல்வேறு மாற்றங்களுடன் நேற்று (03) அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்கும் வீரர்களின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்படும். அத்துடன், பிசிசிஐ இன் வீரர்களுக்கான ஒப்பந்தம் 4 பிரிவுகளைக் கொண்டது.
A+ பிரிவில் இடம்பெறும் வீரருக்கு 7 கோடி ரூபா வழங்கப்படும். A பிரிவிற்கு 5 கோடியும், B பிரிவுக்கு 3 கோடியும் வழங்கப்படும். கடைசி பிரிவான C பிரிவில் இடம்பெறுகின்ற வீரர்களுக்கு ஒரு கோடி ரூபா வழங்கப்படவுள்ளது.
இதில் கடந்த முறை 28 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 27 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இந்திய மண்ணில் வரலாறு படைக்குமா இலங்கை டெஸ்ட் அணி??
- பாண்ட், விஹாரியின் ஆட்டத்தோடு வலுப்பெற்றுள்ள இந்திய அணி
- T20I தரவரிசையில் கோஹ்லி, ரோஹித்தை பின்தள்ளிய பெதும் நிஸ்ஸங்க
இதன்படி, இந்த ஆண்டு ஒப்பந்தத்தில் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்கள் மட்டும் A+ பிரிவில் இடம்பிடித்துள்ளனர். கடந்த ஆண்டும் இவர்கள் மூவரும் தான் A+ பிரிவில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விராட் கோஹ்லி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதும், அவருக்கான சம்பளத்தில் எந்தவித மாற்றத்தையும் பிசிசிஐ கொண்டுவரவில்லை.
ஆனால், இந்திய அணியின் உதவித் தலைவர் கே.எல் ராகுல் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் A பிரிவில் இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்த்து மொஹமட் ஷமி, ரிஷப் பான்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா என மொத்தம் 5 பேர் மட்டுமே இந்த பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக B பிரிவில் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். செட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர், மொஹமட் சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோர் B பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு A பிரிவில் இருந்த இஷாந்த் சர்மா, ரஹானே மற்றும் புஜாரா ஆகிய மூன்று வீரர்களும் இந்த ஆண்டு B பிரிவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ஓரங்கட்டப்படுகின்றனர். எனவே அவர்கள் இனிவரும் காலங்களில் டெஸ்ட் அணியின் ஆடும் பதினொருவர் அணியில் நிரந்தர இடம்பிடிக்கப்பது கடினம் என்பதால், அவர்கள் இருவரும் A பிரிவிலிருந்து B பிரிவிற்கு கீழிறக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல கடந்த ஆண்டு A பிரிவில் இருந்த ஹர்திக் பாண்ட்யா இந்த ஆண்டு C பிரிவில் இடம்பெற்றுள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக இந்திய அணிக்காக முழுமையாக விளையாடவில்லை. அவ்வப்போது ஆடுவதும், பின்னர் காயத்தால் சென்றுவிடுவதாக இருந்தார்.
இதனிடையே, C பிரிவில் ஷிகர் தவான், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, வொஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஹனுமா விஹாரி, யுஸ்வேந்திர சாஹல், சூர்யகுமார் யாதவ், விருத்திமன் சஹா, மயங்க் அகர்வால், தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<