இந்திய அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கு இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் ஓய்வினை வழங்கியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளது.
பாண்டியா இலங்கை அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கமான 16 பேர் அடங்கிய இந்திய டெஸ்ட் குழாத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அதிக போட்டிகளில் விளையாடி தற்போது கூடிய வேலைச் சுமையினை எதிர் கொண்டு வருவதினாலேயே அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய அணியின் தேர்வுக்குழாம் தெரிவிக்கின்றது.
இலங்கை அணிக்கெதிராகவே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாயிருந்த 24 வயதாகும் ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியினை அனைத்துப் வகைப் போட்டிகளிலும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வீரராக காணப்படுகின்றார்.
இந்த வருடத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அடுத்து பாண்டியா இதுவரை 22 ஒரு நாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து T-20 போட்டிகள் ஆகியவற்றில் விளையாடியிருக்கின்றார்.
இந்தியா, இலங்கை அணிக்கெதிராக தமது சொந்த மண்ணில் நடைபெறும் தொடரினை அடுத்து தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்காக திறமையாக செயற்படக்கூடிய வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா என்பதனால் அவருக்கு பாரிய உபாதைகள் எதனையும் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் ஓய்வினை வழங்கவும் இந்திய அணி முகாமைத்துவம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை அணியுடனான பயிற்சிப் போட்டியில் விளையாடும் 13 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதினொருவர் அணியினை தலைமை தாங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த விக்கெட் காப்பாளர் நாமன் ஓஹ்ஜா தற்போது உபாதைக்கு ஆளாகியிருப்பதால் அவருக்குப் பதிலாக பஞ்சாப்பை சேர்ந்த அன்மோல்ப்ரீத் சிங் விருந்தினர் தரப்பினை எதிர்கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்.
முதல்தரப் போட்டிகளில் அண்மையில் அறிமுகமாயிருந்த சிங், ஒரு அரைச் சதம், இரண்டு சதங்கள் (ஒரு இரட்டைச் சதம் அடங்கலாக) என்பவற்றினை விளாசி சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதோடு ஓஹ்ஜா இல்லாததன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அணியினை கேரளாவினைச் சேர்ந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் தலைமை தாங்குகின்றார்.