அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமான இந்திய குழாமில், உபாதைக்குள்ளாகியிருந்த, ரஞ்சி கிண்ண தொடரில் பிரகாசித்த வீரரான ஹார்த்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் தொடர் 1-1 எனுமடிப்படையில் சமநிலையில் உள்ளது.
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட்…
முதல் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற, இன்று நிறைவடைந்த இரண்டாவது போட்டியில் ஆஸி. அணி 146 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் மிக மோசமாக அமைந்திருந்தது. இந்நிலையில், இந்திய அணியினுடைய இன்றைய தோல்வியானது, எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்குமான அணித்தேர்வில் பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளது.
அந்த அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது எஞ்சிய இரண்டு போட்டிகளுக்குமான புதிய குழாத்தினை நேற்று (17) வெளியிட்டிருந்தது.
டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இளம் வீரர் பிரித்வி ஷாஹ் பூரண குணமடையாததன் காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்குமான அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாயங் அகர்வால் அணியின் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆஸி. தொடரில் இருந்து இந்திய இளம் நட்சத்திரம் பிரித்வி ஷா விலகல்
கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை பெறுத்த வரையில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்டம் மிக மோசமாக அமைந்திருந்ததனால் கே.எல் ராகுல், தமிழக வீரர் முரளி விஜய் ஆகியோர் அடுத்துவரும் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், ஹனுமா விஹாரி – மாயங் அகர்வால் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்குவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
மேலும், புதிய வீரராக சகலதுறை வீரரான ஹார்த்திக் பாண்டியா அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த ஆசிய கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய பாண்டியா உபாதையிலிருந்து மீண்டு தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கிண்ண தொடரில் சிறப்பாக ஆடி வருகின்றார்.
இந்நிலையிலேயே அவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னராக ரஞ்சி கிண்ண தொடரில் விளையாடும் போது ‘தான் மிக விரைவில் தேசிய அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையுடன் விளையாடுவதாக குறிப்பிட்டிருந்தார்.’ ஆனால் அவரின் இந்த நம்பிக்கை மிக விரைவாக நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமான இந்திய குழாம்.
விராத் கோஹ்லி (அணித்தலைவர்), அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), முரளி விஜய், கே.எல் ராகுல், சட்டேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹிட் சர்மா, ரிஷாப் பண்ட், பார்த்திவ் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹம்மட் ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹார்த்திக் பாண்டியா, மாயங் அகர்வால்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<