உலக மெய்வல்லுனர் தொடரில் அநுராத, ஹிருனிக்கு ஏமாற்றம்

274

லண்டனில் நடைபெற்று வருகின்ற உலக மெய்வல்லுனர் தொடரின் 3ஆம் நாளான நேற்றைய தினம் (6) இடம்பெற்ற ஆண் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக களமிறங்கிய அநுராத இந்திரஜித் குரே மற்றும் ஹிருனி விஜேரத்ன ஆகியோர் போட்டியின் போது ஏற்பட்ட எதிர்பாராத தடங்கல்கள் மற்றும் திடீர் உபாதை காரணமாக போட்டியை நிறைவு செய்யாமல் விலகிக் கொண்டனர்.

உலக மெய்வல்லுனர் அரங்கின் வருடாந்த திருவிழாவாகக் கருதப்படுகின்ற 16ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (4) லண்டனில் ஆரம்பமாகியது. 205 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இப்போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 2 வீரர்களும், 2 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளனர்.

தனது இறுதி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தோல்வியை சந்தித்த போல்ட்

இதன்படி, 98 போட்டியாளர்களுடன் உலக மெய்வல்லுனர் தொடரின் மரதன் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 31 நிமிடங்கள் மற்றும் 53 செக்கன்கள் மாத்திரம் போட்டியில் ஓடிய அநுராத இந்திரஜித் குரே, காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக குறித்த போட்டியை வெறுமனே 12 கிலோமீற்றர் தூரத்துடன் நிறுத்திக்கொண்டார்.

39 வயதான அநுராத, முன்னதாக 2005ஆம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் தொடரிலும் இதேபோன்று போட்டியின் இடைநடுவில் விலகிக் கொண்டார்.

உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 3ஆவது தடவையாகவும் பங்கேற்றிருந்த அநுராத இந்திரஜித் குரே, கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற அவர், 2 மணித்தியாலமும் 15.38 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்தார். அவர், கடந்த 2015ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் தொடரில் 29ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அநுராதவுடன் போட்டியிட்ட 27 வீரர்கள் போட்டித் தூரத்தை முழுமையாக நிறைவு செய்யாமல்  வெளியேறியதுடன், போட்டியை 2 மணித்தியாலமும் 08.27 செக்கன்களில் நிறைவு செய்த கென்யாவைச் சேர்ந்த ஜெப்ரி கிப்கொரிர் திருய், தனது சிறந்த காலத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில், உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியிவல் பங்கேற்கும் வாய்ப்பை முதற் தடவையாகப் பெற்றுக்கொண்ட அமெரிக்காவில் வசிக்கின்ற இலங்கை வீராங்கனையான ஹிருனி விஜேரத்ன, போட்டியில் 21 கிலோமீற்றர் தூரத்தை நிறைவு செய்த பிறகு இடைநடுவில் ஏற்பட்ட உபாதை காரணமாக துரதிஷ்டவசமாக வெளியேறினார். எனினும், குறித்த போட்டியில் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் அதிகமாக ஓடிய பிறகு நிறைவு கம்பத்தை அண்மித்திருந்த ஹிருணிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

15 மற்றும் 10 கிலோமீற்றர் தூரங்களைக் கொண்ட அரைமரதன் போட்டிப் பிரிவில் இலங்கைக்கான சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள ஹிருனி, கடந்த வருடம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். இந்நிலையில், போட்டியின் பிறகு தனது முகநூல் சமூக வலைத்தளத்தில் போட்டியை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்த கவலையை தெரிவித்திருந்த ஹிருணி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மற்றும் ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதற் தடவையாக களமிறங்கவுள்ள நிமாலி லியனாரச்சி பங்குபற்றவுள்ள முதல் சுற்றுப் போட்டி, எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.25 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், ஈட்டி எறிதல் வீரர் வருண லக்ஷான் தயாரத்ன பங்கேற்கவுள்ள போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை நேரப்படி நள்ளிரவு 1.20 மணிக்கு நடைபெறவுள்ளது.