ஜனாதிபதிக் கிண்ணத்திற்காக ஹமீட் அல் ஹுஸைனி – ஸாஹிரா பலப்பரீட்சை

1027

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியின் 80ஆம் ஆண்டு மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் ஜனாதிபதிக் கிண்ண பாடசாலைகள் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அணியும், போட்டி ஏற்பாட்டுத் தரப்பான ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியும் தெரிவாகியுள்ளன.  

மொத்தமாக 20 அணிகள் பங்கு கொண்ட இந்த போட்டித் தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகியது. மொத்தமாக 20 அணிகள் பங்கு கொண்ட இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் விலகல் (knockout) முறையில் இடம்பெற்றன.  

>> முன்னைய போட்டிகளின் முடிவுகள்  

அரையிறுதிச் சுற்று

முன்னைய சுற்றுக்களில் எந்தவித தோல்விகளையும் பெறாத ஹமீட் அல் ஹுஸைனி, கொழும்பு ஸாஹிரா, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன.

அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் கடந்த 4ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெற்றன.   

முதல் அரையிறுதி – கொழும்பு ஸாஹிரா எதிர் மாரிஸ் ஸ்டெல்லா

பாடசாலைகள் கால்பந்து தொடரில் பிரிவு ஒன்றில் அங்கம் வகிக்கும் இவ்விரு அணிகளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர் கூட்டத்திற்கு முன்னாள் களமிறங்கின.

ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் மொஹமட் ஆகிப் பெற்றுக்கொடுத்த கோலின் உதவியுடன் ஸாஹிரா வீரர்கள் முதல் பாதியில் முன்னிலை வகித்தனர்.

எனினும், இரண்டாவது பாதியில் முழுமையாக ஸாஹிரா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதன் பயனாக, அணித் தலைவர் மொஹமட் முர்ஷிட் 40ஆம் மற்றும் 43ஆம் நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களைப் பெற்றார்.

அதனையடுத்து அவ்வணியின் S. அஹமட் 50ஆவது நிமிடத்திலும் மற்றொரு கோலைப் பெற, நீர்கொழும்பு தரப்பினரால் எந்தவித கோல்களையும் ஆட்டத்தின் இறுதிவரை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.  

இதன் காரணமாக முதல் அரையிறுதியின் நிறைவில் ஸாஹிராக் கல்லூரி வீரர்கள் 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.  

போட்டியின் சிறந்த வீரர் – மொஹமட் ரஷீட் (ஸாஹிராக் கல்லூரி)


இரண்டாவது அரையிறுதி – ஹமீட் அல் ஹுஸைனி எதிர் புனித பெனடிக்ட்  

இறுதியாக இடம்பெற்ற ”ஸாஹிரா சுப்பர் 16” சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் களம்கண்ட இந்த இரு கல்லூரிகளும் மீண்டும் இந்த அரையிறுதியில் சந்தித்தன. குறிப்பாக, ஸாஹிரா சுப்பர் 16 இறுதியில் தாம் கண்ட தோல்விக்கு பதில் கொடுக்கும் வகையிலேயே ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் இந்தப் போட்டியில் களமிறங்கினர்.

Photos – Presidents Cup | Inter School Invitation Football Tournament 2018 – Quarter-finals

Photos of the Presidents Cup | Inter School Invitation Football Tournament 2018..

போட்டியின் முதல் பாதியில் போட்டி ஏற்பாட்டாளர்களே தமது ஆதிக்கத்தை வைத்திருந்தனர். அவ்வணியின் முன்கள வீரர் மொஹமட் ரிஷான் 9ஆம் மற்றும் 17ஆம் நிமிடங்களில் கோல்களைப் பெற்றார். மீண்டும் அணியின் தலைவர் அமான் பைசர் 21ஆம் நிமிடத்தில் அடுத்த கோலையும் பெற, ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் முதல் பாதியில் 3 கோல்களால் முன்னிலை பெற்றனர்.

எனினும் இரண்டாவது பாதியில் புனித பெனடிக்ட் வீரர்கள் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். எதிரணியின் போராட்டத்திற்கு மத்தியில் அமான் பைசர் 60ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் பெற, ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.  

போட்டியின் சிறந்த வீரர் – மொஹமட் ரிஷான் (ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி)

இறுதிப் போட்டி

கொழும்பில் மாத்திரமன்றி, தேசிய மட்ட கால்பந்தில் பிரபலமிக்க அணிகளாகத் திகழும் கொழும்பு ஸாஹிரா மற்றும் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரிகள் இம்முறை ஜனாதிபதிக் கிண்ண பாடசாலைகள் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

குறித்த போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதேதினம் மாலை 3 மணிக்கு இடம்பெறும் 3ஆம் இடத்திற்கான போட்டியில், தொடரின் அரையிறுதியில் தோல்வியுற்ற மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.