கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்று முடிந்திருக்கும் 2020ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதிக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியினை 2-0 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்திய கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி தொடரின் சம்பியன்களாக நாமம் சூடியிருக்கின்றது.
>>ஏழ்மையை வென்று கால்பந்தில் சாதிக்க துடிக்கும் முஷ்பிக்
பலத்த விறுவிறுப்பிற்கு மத்தியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டிக்கு முன்னர் இந்த தொடரில் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி தமது காலிறுதிக்கு முன்னைய சுற்றில் (Pre-Quarter Final) டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியினை 6-0 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்தும், காலிறுதிப் போட்டியில் வெஸ்லி கல்லூரி அணியினை 5-0 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்தும், மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியினை அரையிறுதியில் 7-2 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்தும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மறுமுனையில், களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி தமது காலிறுதிக்கு முன்னைய சுற்றில் தர்மதூத கல்லூரியினை 4-0 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்தும், காலிறுதியில் அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியினை 2-0 என தோற்கடித்தும், அரையிறுதியில் புனித தோமியர் கல்லூரியினை 2-0 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்தும் இறுதிப் போட்டி வாய்ப்பினைப் பெற்றது.
தொடர்ந்து இறுதிப் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் போட்டியின் ஆதிக்கத்தினை எடுக்கத் தவறியிருந்தன. ஹமீட் அல் ஹுசைனி கல்லூரிக்கு ஆரம்பத்தில் சில பிரீ கிக் வாய்ப்புகள் கிடைத்திருந்த போதும், அவை வீணாகின. பின்னர், மொஹமட் சர்பான் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் மத்திய களத்திற்கு சவால்விடுக்கும் வகையிலான ஆட்டத்தினையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில், கேள்விக்குறியாகிய சில முடிவுகளும் நடுவர் மூலம் எடுக்கப்பட்டிருந்தன. இதனால், களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான பெனால்டி மேன்முறையீடு மறுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முதற்பாதிக்கு முன்னர் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் மொஹமட் சர்பான் போட்டியின் முதல் கோலினை கச்சிதமான முறையில் ஹமீட் அல் ஹுசைனி அணிக்காகப் பெற்றுக் கொடுத்திருந்தார்.
இதன் பின்னர் மைதானத்தில் செய்த தவறு ஒன்றிற்காக களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் தலைவர் மொஹமட் அம்மார் இரண்டாம் மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அது அவரின் அணிக்கும் பாரிய பின்னடைவினை எற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் போட்டியின் இரண்டாவது கோலினை ஹமீட் அல் ஹுசைனி அணிக்காக 86ஆவது நிமிடத்தில் நேர்த்தியான முறையில் மொஹமட் சர்பான் பெற்றுக் கொடுத்தார். இந்த கோலோடு இறுதிப் போட்டியில் 2-0 என வெற்றி பெற்ற ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி அணி, தொடரின் சம்பியன்களாக வாகை சூடியது.
>>சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி சுற்றுப் போட்டிகள் விபரம்
இதேநேரம் தொடரின் மூன்றாம் இடத்திற்கான அணியினை தெரிவு செய்யும் மோதலில், மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியானது புனித தோமியர் கல்லூரி அணியினை 5-0 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, தொடரின் மூன்றாம் இடத்திற்கான பட்டத்தினைப் பெற்றுக் கொண்டது.
விருதுகள்
- இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் – மொஹமட் ஹாலித் (ஹமீட் அல் ஹுசைனி)
- தொடரின் சிறந்த கோல் காப்பாளர் – MN. அஹமட் (களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி)
- தங்கப் பாதணி (Golden Boot) – மொஹமட் சர்பான் (ஹமீட் அல் ஹுசைனி)
- தொடரின் பெறுமதிமிக்க வீரர் – மொஹமட் சர்பான் (ஹமீட் அல் ஹுசைனி)
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<