ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக குறித்த தொடரை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 21 முதல் 30ஆம் திகதி காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்று, இறுதிப் போட்டி உள்ளிட்ட 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறுவதை இலக்காகக் கொண்டு இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடரை இலங்கையில் நடத்துவது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘நாங்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இலங்கையில் இந்த தொடரை நடத்த அவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே பிற நாடுகளின் இருதரப்பு போட்டித் தொடர்களை நடத்துவதற்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என அவர் தெரிவித்தார்.
- இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான திகதி மாற்றம்?
- ஆசியக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!
- கிரிக்கெட்டில் ஆண் – பெண் இருபாலருக்கும் சமமான பரிசுத் தொகை
எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இறுதியாக கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரில் பாகிஸ்தான் விளையாடியதுடன், பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<