டயலொக் கடற்கரை கால்பந்தாட்டத்தில் ஹோர்னட்ஸ், வொண்டர் வுமண் சம்பியன்

233
Hambantota Hornets wins Dialog Beach Soccer Championship 2021

இலங்கை கால்பந்து சம்மேளனமும், டயலொக் ஆசியாட்டா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த டயலொக் கடற்கரை கால்பந்து போட்டியின் முதலாம் கட்ட சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹம்பாந்தோட்டை ஹோர்னட்ஸ் அணியும், பெண்கள் பிரிவில் வொண்டர் வுமண் அணியும் சம்பியனாகின.

>> டயலொக் கடற்கரை கால்பந்து: நாளை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்

12 அணிகளின் பங்குபற்றலுடன் ஹம்பாந்தோட்டை கோல்டன் பீச்சஸ் கடற்கரையில் நேற்று (04) நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் மாத்தறை மெரைன்ஸ் அணியை 3 – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட ஹம்பாந்தோட்டை ஹோர்னட்ஸ் அணி சம்பியனாகத் தெரிவாகியது. 

முன்னதாக நடைபெற்ற அரை இறுதிப் போட்டிகளில் களுத்துறை நைட்ஸ் அணியை 2 – 1 என மாத்தறை மெரைன்ஸ் அணியும், களுத்துறை றோயல்ஸ் அணியை 4 – 1 என ஹம்பாந்தோட்டை ஹோர்னட்ஸ் அணியும் வெற்றிகொண்டிருந்தன. 

ஆண்கள் பிரிவில் கோல் ஸ்டோலியன்ஸ், அம்பலாங்கொட டைட்டன்ஸ், பேருவள புளூஸ் (குழு A), மாத்தறை மெரைன்ஸ், ஹம்பாந்தோட்டை கிங்ஸ், களுத்துறை றோயல்ஸ் (குழு B), மாத்தறை ஈக்ள்ஸ், அம்பலாங்கொட அவெஞ்சர்ஸ், களுத்துறை நைட்ஸ் (குழு C), ஹம்பாந்தோட்டை ஹோர்னட்ஸ், பேருவள லயன்ஸ், கோல் ஜயன்ட்ஸ் (குழு D) ஆகிய 12 அணிகள் லீக் சுற்றில் பங்குபற்றின.

லீக் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

>> Video – நடுவர்களினால் பறிக்கப்பட்ட ரொனால்டோவின் வெற்றி கோல் !| FOOTBALL ULAGAM

இதனிடையே, பெண்கள் பிரிவில் இரண்டு அணிகள் மாத்திரமே பங்குபற்றின. கண்காட்சிப் போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சாளரீஸ் ஏஞ்சல்ஸ் அணியை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வொண்டர் வுமண் அணி வீழ்த்தியது. 

நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த சுற்றுப் போட்டியின் எஞ்சிய மூன்று கட்ட கடற்கரை சுற்றுப் போட்டிகள் வல்வெட்டித்துறை, நீர்கொழும்பு, கல்முனை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன

இந்த நான்கு கட்ட கடற்கரை கால்பந்தாட்டப் போட்டிகளுக்கும் டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<