அலெக்ஸ் ஹேல்ஸின் அரைச் சததத்தின் உதவியுடன் இந்திய அணியுடனான இரண்டாவது டி-20 போட்டியில் 2 பந்துகள் மீதமிருக்க இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தியது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி-20, 3 ஒரு நாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதன் முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டி-20 போட்டி இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
இங்கிலாந்து அணியில் மொயின் அலிக்குப் பதிலாக ஜேக் பொல் டி-20 அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயென் மோர்கன் முதலில் களத்தப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். ஆனால் முதல் போட்டியைப் போன்று இவ்விரு வீரர்களுக்கும் எதிர்பார்த்தளவு ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போனது.
இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 7 ஆக இருக்கும் போது அறிமுக வீரர் ஜேக் போல் வீசிய பந்தில் ரோஹித் சர்மா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், ஷிகர் தவானுடன் கை கோர்த்தார்.
இந்த நிலையில் 4ஆவது ஓவரில் தவான், ராகுல் என அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழக்க இந்திய அணி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து அணித் தலைவர் விராட் கோஹ்லியுடன், சுரேஷ் ரெய்னா இணைந்தார். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 79 ஓட்டங்களைப் இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர். இருப்பினும் ரெய்னா 27 ஓட்டங்களுடன் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த டோனி, கோஹ்லியுடன் இணைந்து விளையாடினார். இதில் தனது 37ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய டோனிக்கு நேற்றைய போட்டி சர்வதேச அரங்கில் 500ஆவது போட்டியாகவும் அமைந்தது. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 500 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 3ஆவது இந்தியர் என்ற சாதனையை டோனி படைத்தார்.
ஆனால் நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த கோஹ்லி 47 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, டேவிட் வில்லியின் பந்துக்கு ரூட்டிடம் பிடியெடுப்பை கொடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை இந்திய அணி பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்தில் கலக்கப்போகும் திஸர பெரேரா
இந்திய அணியின் சிறந்த பினிஷர் (Finisher) என்று வர்ணிக்கப்படுகின்ற டோனி 32 ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியா 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி, லையம் பிளெங்கட் மற்றும் ஆடில் ரஷீத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 149 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஜேசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.
உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஜேசன் ரோய் 14 ஓட்டங்களைப் பெற்று போல்ட் ஆனார். அதனையடுத்து ஆபத்தான பட்லருடன், ஜோ ரூட் இணைந்தார். பட்லர் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 5ஆவது ஓவரில் பட்லரின் பிடியெடுப்பை விராட் கோஹ்லி நழுவவிட்டார்.
எனினும், அதே ஓவரில் அடுத்த பிடியெடுப்பை சரியாகப் பிடித்த கோஹ்லி பட்லரை 14 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்
பவர் ப்ளேயில் (Power play) இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ஓட்டங்களைக் குவித்தது. சாஹல் வீசிய 7ஆவது ஓவரில் ஜோ ரூட் (7) எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட இங்கிலாந்து அணி, நிதானமான முறையில் விளையாடி ஓட்டங்களைக் குவித்தது.
இதில் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ், அணித் தலைவர் மோர்கன் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து துடுப்பெடுத்தாடியிருந்தனர். முதல் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்த குல்தீப் யாதவ் சுழல் பந்துவீச்சை சரியாகக் கணித்து விளையாடி, சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினர்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய 14ஆவது ஓவரில் தவான் அருமையான பிடியெடுப்பை எடுத்து மோர்கனை 17 ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார்.
இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், இறுதி 4 ஓவர்களில் 49 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்ததுடன், குல்தீப் வீசிய 17ஆவது ஓவரில் பேர்ஸ்டோ தொடர்ந்து அடித்த சிக்ஸர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனால், நிலைத்து ஆடாத பேர்ஸ்டோ 24 ஓட்டங்களைப் பெற்று புவனேஷ்குமாரிடம் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்தும் இலங்கை அணியின் தலைவராக லக்மால்
கடைசி 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் 8 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. புவனேஷ்குமாரின் முதல் இரு பந்துகளிலும் ஹேல்ஸ் சிக்ஸர், பவுண்டரி அடித்து இந்திய அணியின் கைகளில் இருந்த வெற்றியை பறித்துக்கொண்டார். 2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி 149 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 41 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அத்துடன், ஆட்டநாயகன் விருதும் ஹேல்ஸுக்கே வழங்கப்பட்டது.
இந்திய அணித் தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இவ்விரு அணிகளும் 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமநிலை பெற்றது.
இந்தப் போட்டித் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான டி-20 போட்டி நாளை (08) பிரிஸ்டலில் நடைபெறவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க