IPL இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்ற குஜராத்!

Indian Premier League 2022

188

இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக தொடரில் பங்கேற்ற குஜராத் டைட்டண்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

குஜராத் டைட்டண்ஸ் அணி லீக் போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தது. அதன்மூலம் முதலாவது குவாலிபையர் போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தது.

>> உபாதை காரணமாக கவுண்டி போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்த லக்மால் 

எனவே, தங்களுடைய முதல் குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்ற குஜராத் அணி, குறித்த போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை நேற்றைய தினம் (24) எதிர்த்தாடியது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி, ஜோஸ் பட்லர் (89) மற்றும் சஞ்சு சம்சன் (47) ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணிக்கு, டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி இறுதி ஓவரில் (பிரசித் கிருஷ்ணா வீசிய) 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், மூன்று சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

குஜராத் அணிக்காக டேவிட் மில்லர் 68 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 40 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, மெதிவ் வேட் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தலா 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

IPL  தொடரை பொருத்தவரை முதன்முறையாக விளையாடிய குஜராத் அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளதுடன், இன்றைய தினம் (25) எலிமினேட்டர் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. குறிப்பிட்ட இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணியானது இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்த்தாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<