அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மற்றும் துடுப்பாட்டப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் சவுதி அரேபியாவில்; நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே பல அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் தலைமைப் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர்.
அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் அரங்கில் சென்னை (2008-10), கொச்சி (2011), டெக்கான் (2012), ஹைதராபாத் (2013), பெங்களூரு (2014, 18-20), மும்பை (2015-17) அணிகளுக்காக விளையாடிய பார்த்திவ் படேல், 2020இல் ஓய்வு பெற்றார்.
பார்தீவ் படேல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி உள்ளர். ஒட்டுமொத்தமாக 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், அதில் 13 அரைச் சதங்கள் உட்;பட 2 ஆயிரத்து 848 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கான் அதிரடி வீரர் சேர்ப்பு
- லுங்கி இங்கிடி விலகல்; அதிரடி வீரரை அறிவித்த டெல்லி
- டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்கா வேகப் புயல்
ஐபிஎல் தொடரில் முதன்முறையாக பயிற்சியாளராக செயல்பட உள்ள பார்த்திவ், மூன்று சீசனில் (2021-2023) மும்பை அணியில் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் குழுவில் பணியாற்றினார். அதன்பின் சர்வதேச ‘டி-20’ லீக் முதல் சீசனில் (2023) மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்டார்.
இதுதொடர்பில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ‘எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தயாராகி வரும் நிலையில், துடுப்பாட்ட நுட்பங்கள், உத்திகள் குறித்த பார்த்திவ் படேலின் நுண்ணறிவு வீரர்களின் திறமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். அவரது கூர்மையான கிரிக்கெட் திறன், இளம் திறமைகளுக்கு வழிகாட்டும். அத்தோடு பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்தி, வீரர்களின் மேம்பாடு, செயல்திறனுக்கு அவர் பங்களிப்பார்,’ என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக குஜராத் டைட்டனஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய கேரி கிர்ஸ்டென், அப்பதவியில் இருந்து விலகி பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இணைந்தார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக பார்த்திவ் படேலை நியமிக்க குஜராத் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. தொடர்ந்து 2023ஆம் ஆண்டும் இறுதிப் போட்டி வரை சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசியில் சென்னை சுபர் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி சம்பியனாகும் வாய்ப்பை கோட்டைவிட்டது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னரே தொடரை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<