பங்களாதேஷ் அணிக்கெதிராக கடந்த மாதம் நிறைவுக்கு வந்த கிரிக்கெட் தொடரில் பெற்றுக்கொண்ட வெற்றியின் பிறகு எமது வீரர்கள் மனதளவில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதால் எமது ரசிகர்களுக்கு முன்னால் சுதந்திரக் கிண்ண தொடரிலும் சிறப்பாக விளையாடி வெற்றிகொள்வதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை T-20 அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபற்றும் சுதந்திரக் கிண்ணத் முத்தரப்பு T-20 தொடர் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. T-20 போட்டிகளாக நடைபெறும் இப்போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
சுதந்திர கிண்ண சவால்கள் எவ்வாறு இருக்கும்?
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தினை நினைவுகூறும் விதமாக இலங்கை, இந்தியா …
இந்நிலையில், குறித்த போட்டித் தொடருக்கான சம்பியன் கிண்ணத்தை அறிமுகம் செய்துவைக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு மூன்று அணிகளது தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று(05) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சந்திமால் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், ”இது மற்றுமொரு போட்டித் தொடராகும். உண்மையில் ஒரு அணியாக இப்போட்டித் தொடருக்கு முகங்கொடுக்க நாம் தயாராகவுள்ளோம். ஏனெனில் நாம் இந்தமுறை எமது ரசிகர்களுக்கு முன்னால் விளையாடவுள்ளோம். அவர்களது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் விளையாடுவதைப் போல இத்தொடரை கைப்பற்றுவதற்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனவே, எமது திட்டங்களை ஒவ்வொரு போட்டிகளிலும் கையாண்டு முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
கடந்த ஒரு வருடமாக எனக்கு T-20 அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பங்களாதேஷ் தொடரில் தான் எனக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிட்டியது. T-20 அணியில் தொடர்ந்து விளையாட வேண்டுமானால் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை தொடர்ந்து அடிக்க வேண்டும். எனவே, கடந்த காலங்களில் என்னிடம் இருந்த அந்த குறைபாட்டை தற்போது ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடிந்ததாக நான் நம்புகிறேன்.
இதேநேரம், கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டித் தொடர்களில் நாம் வலது மற்றும் இடதுகை துடுப்பாட்ட வீரர்களுடன்தான் அதிகம் களமிறங்கியிருந்தோம். எனினும், பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் அதில் ஒருசில மாற்றங்களை செய்ததால் எமக்கு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இப்போட்டித் தொடரிலும் தேவைக்கேற்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், கடந்த 10 நாட்களாக நாம் பிரேமதாஸ மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தோம். எனவே, மிகப் பெரிய நம்பிக்கையுடன் முதல் போட்டியில் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஓர் ஆண்டாக இடைவிடாது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டோனி, ஹார்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரிட் பும்ராஹ், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்து, இளம் வீரர்களுக்கு இப்போட்டித் தொடரில் வாய்ப்பளிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் முதலிடம் பிடித்த சங்கக்கார
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் 3ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள …
இந்நிலையில், சுதந்திர கிண்ணத்திற்கான தமது ஆயத்தம் குறித்து இந்திய அணியின் இத்தொடருக்கான தலைவர் ரோஹித் சர்மா கருத்து வெளியிடுகையில், ”இப்போட்டித் தொடரில் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு அதிகமா?, இல்லையா? என்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. T-20 போட்டியில் அன்றைய தினம் சிறப்பாக செயல்படும் எந்த அணியும் வெற்றி பெறலாம். ஒரு ஓவரில் கூட ஆட்டத்தின் போக்கு மாறலாம். இந்தப் போட்டியிலும் எந்த அணியும், மற்றொரு அணியை வீழ்த்த முடியும். எனவே, இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை வழிநடாத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிஷ்டமாக கருதுகிறேன்.
தற்போதைய போட்டி அட்டவணையை பொறுத்தவரையில் வீரர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருக்கும் வீரர்களின் பலத்தை பரிசோதிக்க இந்தப் போட்டித்தொடர் நல்ல வாய்ப்பாகும்” என்று அவர் தெரிவித்தார்.
இநேநேரம், பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்மதுல்லாஹ் ரியாத் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், ”இப்போட்டித் தொடர் எமக்கு சவால் மிக்கதாக அமையவுள்ளது. எமது அணியின் அனுபவமிக்க வீரரான சகிப் அல் ஹசன் விளையாடாதது மிகப் பெரிய இழப்பாகும். எனினும், இளம் வீரர்களுடன் இத்தொடரை கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.
முன்னதாக இலங்கை சுதந்திரமடைந்து 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி 1998இல் நடத்தப்பட்ட சர்வதேச ஒரு நாள் முத்தரப்பு சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை, இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் விளையாடியிருந்தன. இதன் இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியை மொஹமட் அஸாருதீன் தலைமையிலான இந்திய அணி எதிர்த்தாடியது. இதில் இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றது.
எனினும், அதற்கு முன்னதாக இந்தியாவில் 1997இல் நடைபெற்ற பொன்விழா சுதந்திர கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை நினைவுகூரத்தக்கது.
பங்களாதேஷுடனான T20 தொடரும் இலங்கை வசம்
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்று …
இதன்படி, இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தை மீண்டும் முழு உலகிற்கும் பறைசாற்றும் வகையில் இன்று ஆரம்பமாகவுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு தொடரானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையவுள்ளது. இத்தொடரின் சம்பியனாக தெரிவாகும் அணியைக் கூட ஊகிக்க முடியாத அளவுக்கு அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனினும், இம்மூன்று அணிகளதும் நிரந்தர தலைவர்கள் இப்போட்டித் தொடரில் விளையாடாத காரணத்தால் இளம் வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, இலங்கை அணி தினேஷ் சந்திமால், இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் பங்களாதேஷ் அணி மஹ்மதுல்லாஹ் ரியாத் ஆகியோரின் தலைமையிலும் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை மற்றும் இந்திய அணியின் முகாமையாளர்களான அசங்க குருசிங்க மற்றும் சுனில் சுப்ரமணியம், பங்களாதேஷ் அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் கோர்ட்னி வோல்ஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.