சவுதி அரேபியாவால் நிதியளிக்கப்படும், டென்னிஸ் விளையாட்டை ஒத்தவகையில் கிராண்ட்ஸ்லாம் வடிவில் சர்வதேச T20 கிரிக்கெட் லீக்கை அறிமுகப்படுத்துவதற்கான இரகசிய திட்டமொன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த திட்டம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரபல வீரரான நீல் மாக்ஸ்வெல்லின் ஆலோசனையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது அத்துடன், இதற்கான கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டென்னிஸ் விளையாட்டில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறுகின்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களைப் போல, ஆண்டொன்றுக்கு நான்கு வேறு இடங்களில் நடைபெறும் எட்டு அணிகளைக் கொண்ட லீக் தொடராக இப்புதிய T20 லீக் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த அணிகள் புதிய பிராஞ்சைஸிகளாக இருக்கும், அவை கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் (அவுஸ்திரேலியாவையும் உட்பட) மற்றும் புதிய சந்தைகளில் அமைந்துள்ளன. மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளும் இருக்கும். இறுதிப்போட்டி சவுதி அரேபியாவில் நடத்தப்படலாம்.
சவுதி அரேபியாவின் SRJ ஸ்போர்ட்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த லீக்கின் முக்கிய நிதி வழங்குநர் ஆகும், சவுதி அரேபியாவின் பொதுத் முதலீட்டு நிதியத்தின் (PIF) SRJஸ்போர்ட்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம், அவுஸ்திரேலியாவின் முன்னாள் தொழில்முறை லீக்குகள் கால்பந்து தலைமை நிர்வாகி டேனி டவுன்சனின் தலைமையில் செயல்படுகிறது. எனவே, இந்த நிறுவனம் புதிய T20 லீக் தொடர் தொடர்பில் தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐசிசி) பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- டெல்லி கேபிடல்ஸின் தலைவராக அக்ஸர் படேல் நியமனம்
- டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் டு பிளெசிஸிற்கு புதிய பதவி!
இப்புதிய T20 லீக் தொடரானது, ஏனைய நாடுகளில் நடைபெறுகின்ற உள்ளூர் T20 லீக் தொடர்களுக்கு பாதிப்பில்லாமல், உலகளாவிய கிரிக்கெட்டின் எதிர்கால சவால்களை சமாளிக்க உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறிய நாடுகள் இதன் மூலம் நிதி ஆதாயங்களை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மேக்ஸ்வெல் மற்றும் டவுன்சன் இப்புதிய T20 லீக் தொடர் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தாலும், தகவல் வழங்க அனுமதி இல்லாத ஆதாரங்களின் படி, இப்புதிய T20 லீக் தொடர், சர்வதேச கிரிக்கெட் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL), அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (BBL) போன்ற தேசிய அடிப்படையிலான T20 போட்டிகளுக்கிடையில் நாற்காட்டியில் கிடைக்கக்கூடிய கால இடைவெளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சவுதி அரேபியாவின் ஆதரவில் நடத்தப்படவுள்ள இந்த T20 லீக்கிற்கு பிசிசிஐ, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் ஐசிசி இன் அங்கத்துவ நாடுகளின் ஒப்புதல் தேவைப்படும், மேலும் இறுதி முடிவை ஐசிசி இன் தலைவர் ஜெய் ஷா எடுப்பார். இந்த லீக் ஒப்புதல் பெறும் பட்சத்தில், கிரிக்கெட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக உருவாகும், மேலும் 36 வயதான ஜெய் ஷா இந்திய வீரர்களை ஐபிஎல் தவிர்ந்த பிற T20 பிராஞ்சைசி லீக்குகளில் விளையாட அனுமதிக்க பிசிசிஐ சம்மதிக்க வைக்க முக்கிய பங்கு வகிக்க முடியும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சவுதி அரேபியா விளையாட்டுத் துறையில் பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது, குறிப்பாக உலகின் சிறந்த கோல்ஃப் வீரர்களை மிகப்பெரிய சம்பளத்தில் LIV சுற்றுப்போட்டிக்கு கவர்ந்து கோல்ஃப் உலகை இரண்டாகப் பிளந்துள்ளது. இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து கழகமான நியூகாசில் யுனைடெடின் 80 சதவீதத்தை வாங்கி, கால்பந்து உலகின் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் கரீம் பென்ஸிமாவை பணம் கொட்டும் சவுதி ப்ரோ லீக்கிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது.
சவுதியின் தலைநகர் ரியாத்தில் மிகப்பெரிய ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டிகளை நடத்த பெரும் செலவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மற்ற போர் விளையாட்டுகள் மற்றும் மின்னணு விளையாட்டுகளிலும் பெரிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 2036 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்த சவுதி அரேபியாவும் விண்ணப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையனைத்தும் ஒருபுறமிருக்க, தற்போது சவுதி அரேபியா கிரிக்கெட்டிலும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஐசிசி-இன் இணை உறுப்பினராக, சவுதி அரேபியா ஏற்கனவே கிரிக்கெட்டுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தியுள்ளது, கடந்த நவம்பரில் ஜிட்டாவில் 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்தியது.
சவுதி அரேபியாவில் குறைந்தளவு கிரிக்கெட் உள்கட்டமைப்பு உள்ளது, ஆனால் அது நவீன மைதானங்கள் மற்றும் எதிர்கால நகரங்கள் உள்ளிட்ட ஒரு பிரமிக்க வைக்கும் கட்டுமான திட்டத்தின் நடுவில் உள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இப்புதிய T20 லீக் தொடர், கிரிக்கெட்டின் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலைமை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல, பணம் கொட்டும் லீக் தொடர்கள் எதிர்காலத்தில் புதிதாக அறிமுகமாகும் பட்சத்தில் நிச்சயம் கிரிக்கெட்டின் மகத்துவமும் அழிந்துவிடும், கிரிக்கெட் இன்னும் அதள பாதாளத்துக்கு தள்ளப்படும் என கிரிக்கெட் வலலுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<