இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்த தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிரஹம் போர்ட், உத்தியோகபூர்வமாக தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதை அறிவித்துள்ளார்.

 

கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம்

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட், திடீர் என்று சொல்லாமலேயே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் மீண்டும் நாட்டிற்கு வர மாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தற்பொழுது இலங்கை கிரிக்கெட்டில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் இரண்டாவது தடவையாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றிருந்த போர்ட் கடந்த 15 மாதங்களாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் இருந்தார். அடுத்த உலகக் கிண்ணம் வரையிலும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட ஒப்பந்தமாகியிருந்த போர்ட், இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்கவுடன் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளின் காரணமாக, தனது பதவியிலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

கிரஹம் போர்ட்டின் விலகல் குறித்து, இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால கருத்து தெரிவிக்கையில், “போர்ட் எமது அணிக்காக வழங்கியிருந்த அளவிட முடியாத சேவைகளிற்காக நாம் அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம். இக்கட்டான நிலைமையொன்றில் நாம் இருந்திருந்த போது, எமது அணியில் இணைந்திருந்த அவர், எம் மீது நம்பிக்கை வைத்து எமக்கு முழு ஆதரவினையும் வழங்கியிருந்தார்“ என்றார்.  

போர்டின் பயிற்றுவிப்புக் காலத்தில் இலங்கை அணியானது, அதி திறமைமிக்க அவுஸ்திரேலிய அணியினை 3-0 என டெஸ்ட் போட்டிகளில் வைட் வொஷ் செய்திருந்தது. எனினும், கடந்த 2016 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம், தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் இலங்கை சாதித்திருக்கவில்லை.

“நான் இம்முறை அழகிய காலி நகர கோட்டையில் பறவையொன்றின் பார்வையில் இருந்து இலங்கை அணியின் ஆட்டத்தைப் பார்க்கப் போகின்றேன். ஆனால், இம்முறை கைசேதம் எதுவும் எனக்கு இருக்கப்போவதில்லை. நான் இலங்கை அணிக்கும், வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அதோடு, எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து, போட்டிகளில் மனப்பூர்வமாக ஆடுங்கள் என இளம் வீரர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். “

என கிரஹம் போர்ட் தனது விலகல் தொடர்பான ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இலங்கை அணியின் தற்போதைய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளரான நிக் போத்தாஸ், நடைபெறவுள்ள இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான தொடரில் இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என அறியக்கிடைக்கின்றது. அதோடு, இலங்கை கிரிக்கெட்டின் உயர் பீடம் இந்திய அணியுடனான தொடரின் போது இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை தேர்வு செய்யவுள்ளது.