குளோபல் T20 கிண்ணம் கிறிஸ் கெய்லின் வான்கூவர் நைட்ஸ் அணிக்கு

569
FRED THORNHILL / THE CANADIAN PRESS

கனடா கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்த கனடா குளோபல் T20 கிரிகெட் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் B அணியை வீழ்த்திய கிறிஸ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.  

கனடா குளோபல் டி20 லீக்கில் ஆறு இலங்கை வீரர்கள்

கனடா கிரிக்கெட் சபையினால் முதற்தடவையாக ஏற்பாடு …

கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான இத்தொடரில் பல பிரபலமான  வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். குறிப்பாக, இலங்கை அணியின் லசித் மாலிங்க, பாகிஸ்தான் அணியின் சஹீட் அப்ரிடி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடினர். இது தவிர, கடந்த மார்ச் மாதம் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் (.சி.சி) போட்டித் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரும் விளையாடியிருந்தது விஷேட அம்சமாகும்.  

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற  தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் கிறிஸ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய அந்தோனி பிரம்பில் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் B அணியும் மோதியிருந்தன.

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வான்கூவர் நைட்ஸ் அணித் தலைவர் கெயில் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் B அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பெபியன் அல்லென் அதிக பட்சமாக 41 ஓட்டங்கள் பெற்றிருந்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் வான்கூவர் நைட்ஸ் அணி சார்பாக செல்டன் கொட்ரல் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஃபவாட் அஹமட்  24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சாத் பின் சபர்  26 ஓட்டங்களுக்கு 2  விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.   

உலக பதினொருவர் அணியை இலகுவாக வென்ற உலக சம்பியன் மேற்கிந்திய தீவுகள்

உலக பதினொருவர் அணியுடனான T20 போட்டியில் ..

பின்னர், 146  ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வான்கூவர் நைட்ஸ் அணி 3.2 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாற்றம் கண்டிருந்த சந்தர்ப்பத்தில் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டஸ்ஸன் மற்றும் சாத் பின் சபர் ஆகியோரின் நிதானமான மற்றும் அதிரடியான ஆட்டம் வான்கூவர் நைட்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இவ்விருவரும் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 126 ஓட்டங்கள் பெற்றனர். டஸ்ஸன் 44 ஓட்டங்களையும் சாத் பின் சபர் 79 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர். இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது வான்கூவர் நைட்ஸ் அணி.  

போட்டியின் ஆட்ட நாயகனாக சகலதுறையிலும் சிறப்பாக விளையாடிய சாத் பின் சபர் தெரிவு செய்யப்பட்டார்.  

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் B – 145 (17.4) – பெபியன் அல்லென் 41, செல்டன் கொட்ரல் 29/4, ஃபவாட் அஹமட் 24/3, சாத் பின் சபர் 26/2

வான்கூவர் நைட்ஸ் – 148/3 (17.3) – சாத் பின் சபர் 79* டஸ்ஸன் 44* டேர்வல் கிரீன் 20/2

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…