இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் அசித்த பெர்னாண்டோ இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கௌண்டி சம்பியன்ஷிப் தொடரில் கிளாமோர்கன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான இவர், இலங்கை கிரிக்கெட்டின் தடையில்லா சான்றிதழுக்கு (NOC) உட்பட்டு, 2025 பருவகாலத்தின் ஆரம்பத்தில் டிவிஷன் 2 பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற முதல் 7 கௌண்டி சம்பியன்ஷிப் போட்டிகளில் கிளாமோர்கன் அணிக்காக விளையாடவுள்ளார்.
கிளாமோர்கன் அணிக்காக 3 வடிவங்களிலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அசித்த பெர்னாண்டோ விளையாடவுள்ளது அந்த அணிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கிளாமோர்கன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டமை தொடர்பில் அசித்த பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், ‘இந்த வாய்ப்புக்காக கிளாமோர்கன் கிரிக்கெட்டுக்கு மிக்க நன்றி. அடுத்த ஆண்டு கிளாமோர்கன் அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், கௌண்டி கிரிக்கெட் அணிக்கு திரும்புவதற்கும் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். கிளாமோர்கன் அணிக்காக கடைசியாக விளையாடி போது எனது ஆட்டத்தை மேம்படுத்த பெரிதும் உதவியது. மேசன் ஜக்ரேன்ஸ, காலின் ஜஇங்ராம்ஸ மற்றும் கிளாமோர்கன் அணியின் அனைத்து வீரர்களுடனும் விளையாட ஆவலாக உள்ளேன், எதிர்வரும் பருவகாலத்தில் என்னால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நம்புகிறேன்.’ என்று கூறினார்.
2017இல் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அசித்த, 2021இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
அதேபோல, 2022இல் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்சில் 51 ஓட்டங்களுக்கு 6 விக்கெடடுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் ஐந்து விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். அதுமாத்திரமின்றி, 2024இல், லோர்ட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தனது இரண்டாவது ஐந்து விக்கெட் குவியலைப் (5-102) பதிவு செய்தார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ருமேஷ் ரத்நாயக்கேவைத் தொடர்ந்து லோர்ட்ஸ் கௌரவப் பலகையில் பெயர் பொறிக்கப்பட்ட இரண்டாவது இலங்கை பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதனிடையே, 2022இல் பங்களாதே{க்கு எதிராக T20i அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அசித்த, தற்போது இலங்கை அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடி வருகின்றதுடன், ஐசிசி இன் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<