ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஜெர்மனி-போலந்து இடையேயான ஆட்ட முடிவில் கோல் எதுவும் விழாததால் சமநிலையில் முடிவுற்றது.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்துவருகிறது. இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள ஜெர்மனி-போலந்து அணிகள் மோதின.
உலக சாம்பியனான ஜெர்மனி அணி போலந்தை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலந்து வீரர்கள் ஜெர்மனிக்கு ஈடுகொடுத்து விளையாடினார்கள். ஜெர்மனியின் கோல் வாய்ப்புகளை பலமுறை முறியடித்தனர்.
55ஆவது நிமிடத்தில் போலந்து அணிக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி வீரர் மிலீக் அதை தவறவிட்டார். கோல் அடிக்க முயற்சி செய்த ஜெர்மனி அணிக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்டம் முடிவில் கோல் எதுவும் விழாமல் இந்த ஆட்டம் சமநிலை ஆனது.
போலந்து அணிக்கு எதிராக வெற்றி பெறமுடியாததால் ஜெர்மனி வீரர்கள் சோகத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார்கள். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் உக்ரைன் அணியை வீழ்த்தியிருந்தது.
முன்னதாக இதே பிரிவில் நேற்று நள்ளிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து-உக்ரைன் அணிகள் மோதின. இதில் உக்ரைன் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 49ஆவது நிமிடத்தில் வடக்கு அயர்லாந்து வீரர் மெக்யூலே கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வடக்கு அயர்லாந்து 2ஆவது கோலைப்போட்டது.
இந்த கோலை மெக்ஜின் அடித்தார். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்து வென்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
முதல் ஆட்டத்தில் போலந்து அணியிடம் தோற்று இருந்தது. உக்ரைன் பெற்ற 2ஆவது தோல்வி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு சுற்று வாய்ப்பு கிட்டுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஜெர்மனி, போலந்து அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கியுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்