ஜெரால்ட் கோட்ஸி இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம்

West Indies Tour of Sri Lanka 2024

3

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கை அணி தற்சமயம் தென்னாப்பிரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியானது 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது 

மேலும் இலங்கை அணிக்கு எதிரான இந்த அபார வெற்றிக்கு பிறகு தெனனாப்பிரிக்கா அணியானது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது 

இதனிடையே, குறித்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோட்ஸி விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது 

எவ்வாறாயினும், நாளைய தினம் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் முடிவுகளைப் பொறுத்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 

இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸ்லில் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஜெரால்ட் கோட்ஸி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியின் போது தென்னாப்பிரிக்கா அணியின் சகலதுறை வீரர் வியான் முல்டர் காயமடைந்ததுடன், இந்த டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகியதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. மேலும், அவருக்கான மாற்று வீரராக மெத்யூ பிரீட்ஸ்கி தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் 

இந்த நிலையில், ஜெரால்ட் கோட்ஸியும் காயம் கரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது 

இதுகுறித்து பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் டெம்பா பவுமா, ‘இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த வியான் முல்டர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும், அவருக்கான மாற்று வீரரையும் நாங்கள் தற்போது அறிவித்துள்ளோம். அதேசமயம், இப்போட்டியின் போது காயத்தை சந்தித்துள்ள ஜெரால்ட் கோட்ஸியின் உடற்தகுதி குறித்து மருத்துவ குழுவினர் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்என்று தெரிவித்துள்ளார். 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<