இலங்கை அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (23) நடை பெற்ற T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டியில் விளையாடிய அயர்லாந்து அணியின் சகலதுறை வீரர் ஜோர்ஜ் டொக்ரெலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ICCயின் கொரோனா வழிகாட்டுதலுக்கு அமைய ஜோர்ஜ் டொக்ரெலை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொவிட் தொற்றுக்குள்ளான ஜோர்ஜ் டொக்ரெலின் கொரோனா தொற்று அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருப்பினும், அயர்லாந்து கிரிக்கெட் அணியின் மருத்துவ ஊழியர்கள் கொரோனா நெறிமுறைகளுக்கு ஏற்ப அவரை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், அவர் போட்டிகளில் ஈடுபடுவதற்கும் அல்லது பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் இது தடையாக இருக்காது. ஆனால், அணியில் உள்ள ஏனைய வீரர்களை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்திருக்கவும், போட்டி மற்றும் பயிற்சி நடைபெறுகின்ற நாட்களில் அவரை தனியாக அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கடுப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணம்; கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ICC
இதேவேளை, அவரது அறிகுறிகள் மிகவும் லேசானவை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஹோபார்ட் மைதான அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ஏனையோரின் பாதுகாப்பிற்காக அவரது பயணங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் முகாமைத்துவம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று ICC அறிவித்துள்ளது. அதேபோல, போட்டியின் போது வீரர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை எதுவும் இருக்காது எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
எனவே, இங்கிலாந்து அணிக்கெதிராக செவ்வாய்க்கிழமை (26) மெல்பேர்னில் நடைபெறவுள்ள போட்டியில் ஜோர்ஜ் டொக்ரெல் விளையாடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<