இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 (பிரிவு 1) கால்பந்து சுற்றுப்போட்டியில், கெலிஓய கால்பந்துக் கழகம் மற்றும் ரெட் சன் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி, மைதான முகாமைத்துவம் மைதானத்தை வழங்க மறுத்தமையினால் குறித்த தினத்தில் இடம்பெறவில்லை.
கடந்த வருடம் பிரிவு இரண்டில் சம்பியனாக முடிசூடி பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்ட கெலிஓய கால்பந்துக் கழகம் மற்றும் கம்பளை நகரை பிரதிநிதித்துவப்படுத்தும் ரெட் சன் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான குறித்த போட்டி, கண்டி போகம்பரை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (3ஆம் திகதி) 3.30 மணிக்கு இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனவே, போட்டிக்காக இரு அணிகள், நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் சமூகமளித்திருந்தனர். எனினும் போகம்பரை மைதான முகாமைத்துவக் குழு போட்டிக்காக மைதானத்தை ஓப்படைக்க மறுத்தனர். அதேவேளை, போட்டியை ஆரம்பிப்பதற்கான எந்தவிதமான மைதான ஆயத்தமும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம்
களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான டிவிஷன் I…
இதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட மைதான ஊழியர்களிடம் வினவியபோது, சீரற்ற காலநிலை காணப்படுவதாலும், போட்டி ஆரம்பித்ததன் பின்னர் மழை பெய்தால் அது மைதானத்தை பழுதடையச் செய்யும் என்பதாலும் மைதானத்தை வழங்க மறுப்பதாகத் தெரிவித்தனர். மேலும், இவர்கள் இது சமபந்தமாக நேரகாலத்துடனேயே மைதானத்தை பதிவுசெய்த அணிக்கு அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தனர்.
மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் மைதான ஏற்பாடுகள் நடைபெறுமிடத்து போட்டியை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்தனர். எனினும், மாலை 4.00 மணி வரை போட்டியை நடாத்துவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் நடைபெறாததையடுத்து, நடுவர்கள் போட்டியை இடைநிறுத்துவதாக அறிவித்தனர்.
மைதானத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டும், இரு அணிகள், நடுவர்களும் சமூகமளித்திருந்தும் போட்டி நடைபெறாததையடுத்து பார்வையாளர்கள் பலத்த ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிகழ்வால் தமது முதல் போட்டியே நடைபெறாததையடுத்து இரு அணியினதும் வீரர்கள் உட்பட முகாமைத்துவ உறுப்பினர்களும் பெரும் அதிருப்தியடைவதாகத் தெரிவித்தனர்.