இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 (டிவிஷன் 2) அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் சம்பியன் கிண்ணத்தை கெலிஓய கால்பந்து கழகம் சுவீகரித்துக்கொண்டது. இவ்வணி இறுதிப் போட்டியில் ரட்னம் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்தியதன்மூலமே இந்த வெற்றியை அடைந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இடம்பெற்று முடிந்த அரையிறுதிப் போட்டியில் ரட்னம் விளையாட்டுக் கழகம், பாடும்மீன் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோன்று, கெலிஓய கால்பந்து கழகம், கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டு இறுதிக்குள் நுழைந்தது.
பிரீமியர் லீக் டிவிஷன் 2 இறுதிப்போட்டியில் மோதவுள்ள ரட்னம் மற்றும் கெலிஓய அணிகள்
இந்நிலையில் தலைநகரின் மிகவும் பழமையான, பிரபலமடைந்த ரட்னம் மற்றும் மலையகத்தில் வளர்ந்து வரும் ஒரு அணியாக இருக்கும் கெலிஓய அணிகளுக்கு இடையிலான தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி நாவலபிடிய ஜயதிலக அரங்கில் இடம்பெற்றது
ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடத்திலேயே கெலிஓய தரப்பினரினால் கோலுக்கான முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் இறுதியில் பந்தை ரட்னம் அணியின் கோல் காப்பாளர் ஷெஹான் தடுத்தார்.
16ஆவது நிமிடத்தில் கெலிஓய அணியினருக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைக்க, பந்தை ஐசாக் உதைந்தார். இலகுவாக வந்த பந்தை கோல் காப்பாளர் செஹான் தடுத்தார்.
அதற்கு அடுத்த நிமிடம் அரவிந்த உதைந்த பந்தை கெலிஓய அணியின் கோல் காப்பாளர் மொஹமட் அகீல் பிடிக்க முனைந்தார். எனினும் அவரின் கைகளில் இருந்து பந்து கைநழுவ, ரட்னம் தரப்பு கோலுக்கான மற்றொரு முயற்சியை மேற்கொண்டது. எனினும் மிகவும் வேகமாக செயற்பட்ட அகீல் பந்தை மீண்டும் கைப்பற்றினார்.
ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் கெலிஓய அணியினருக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை முஜாஹித் தலையால் முட்டி பந்தை கோலுக்குள் செலுத்தினார். எனினும் கோலுக்கு மிக அண்மையில் பந்து சென்ற நிலையில் ஷெஹான் அதனைப் பாய்ந்து பிடித்தார்.
முதல் பாதியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி எல்லைக்கு மிக அண்மையில் வைத்து கெலிஓய அணியின் ஒரு வீரரை முறையற்ற விதத்தில் ரட்னம் வீரர் வீழ்த்த, கெலிஓய அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அந்த உதையைப் பெற்ற முஜாஹித் உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு சற்று உயர்ந்தவாறு வெளியே சென்றது.
முதல் பாதி : ரட்னம் விளையாட்டுக் கழகம் 00 – 00 கெலிஓய கால்பந்து கழகம்
இரண்டாவது பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களில் ரட்னம் அணியினரால் சிறந்த கோல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு அடுத்த நிமிடத்தில் கெலிஓய வீரர் முஜாஹித் மூலம் ஹெடர் முறையில் ஒரு கோலுக்கான முயற்சி மேற்கொண்ட போதும், பந்து கம்பங்களுக்கு சற்று வெளியால் சென்றது.
ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் ரட்னம் அணியினரால் உதைக்கப்பட்ட மிகவும் நீண்ட தூர ப்ரீ கிக் உதையை எதிரணியின் கோல் காப்பாளர் பிடித்தார். அது போன்றே அதன் பின்னரும் ரட்னம் அணிக்கு கிடைத்த பல வாய்ப்புக்களையும் அவர் சிறந்த முறையில் தடுத்தார்.
இரண்டாவது பாதியில் கெலிஓய அணியினரின் பலம் சற்று அதிகரித்த நிலையில் ஆட்டம் சென்றது. அவர்கள் ரட்னம் அணியினரை விட அதிக வாய்ப்புக்களைப் பெற்றனர்.
இந்நிலையில் கொலிஓய அணியினருக்கு மற்றொரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த உதையைப் பெற்ற ஐசாக், பந்தை வேகமாக உதைய, அது கம்பங்களுக்கு வெளியால் சென்றது.
எனினும் அதன் பின்னர் ரட்னம் அணியினரின் பலமும் அதிகரித்தது. முன்பை விட வித்தியாசமாகவும், வேகமாகவும் அவர்கள் ஆட ஆரம்பித்தனர்.
ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் ரட்னம் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைக்க, மெஹமட் அமான் அதனை மிகவும் வேகமாக உதைந்தார். அதன்போது பந்து எதிரணியின் கோல் கம்பத்தின் மேலே பட்டு வெளியே சென்றது. இதன்மூலம் அவர்களது சிறந்த வாய்ப்பு தவறவிடப்பட்டது.
இறுதித் தருணத்தில் ரட்னம் அணி வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டு வந்த நேரம், பந்தை சிறந்த முறையில் பல வீரர்களைத் தாண்டி கொண்டு சென்ற கருனாசிங்க இறுதியாக கோல் காப்பாளரையும் தாண்டி உதைந்தார். எனினும் பந்து கோலின் ஒரு பக்க கம்பங்களில் பட்டு வெளியே சென்றது.
அதற்கு அடுத்த நிமிடம் ரட்னம் அணியின் பின்கள வீரர் ஒருவர் மேற்கொண்ட தடுப்பின்போது, பந்து அவர்களது திசை கோல் பக்கமே மீண்டும் வந்தது. எனினும் இறுதி நேரத்தில் கம்பங்களுக்கு அருகில் வைத்து கோல் காப்பாளர் ஷெஹான் பந்தைப் பிடித்தார்.
போட்டியின் இறுதி நேரம் இரு தரப்பினராலும் மிகவும் அதிரடியாக ஆடப்பட்டாலும் ஆட்டம் நிறைவடைவதற்கான சமிஞ்சை காண்பிக்கப்படும்வரை இரு தரப்பினராலும் கோல்கள் எதுவும் பெறப்படவில்லை.
முழு நேரம் : ரட்னம் விளையாட்டுக் கழகம் 00 – 00 கெலிஓய கால்பந்து கழகம்
ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றமையினால் வெற்றியைத் தீர்மானிப்பதற்காக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
பெனால்டி உதை விபரம்
- முஜாஹித் (கெ.கா.க) – முஜாஹித் அடித்த பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.
- அரவிந்த (ர.வி.க) – அரவிந்த நேராக கோல் காப்பாளருக்கே உதைய, அதனை அகீல் இலகுவாகப் பிடித்தார்.
- ஒடெல் எவன்ஸ் (கெ.கா.க) – ஒடெலின் உதை எந்த வித தடைகளுக்கும் வாய்ப்பின்றி மிக வேகமாக கோலுக்குள் சென்றது.
- டியாகோ 10 (ர.வி.க) – இவரது உதையும் கோலுக்குள்ளேயே சென்றது.
- ஐசாக் 10 (கெ.கா.க) – ஐசாக்கின் உதையை கோல் காப்பாளர் செஹான் சிறந்த முறையில் பாய்ந்து தடுத்தார்.
- சதீஷ் குமார் – சதீஷின் உதையும் கோல் காப்பாளருக்கு நேரே சென்றது. எனவே, அகீல் இலகுவாகப் பந்தைப் பிடித்தார்.
- ருஷ்தி (கெ.கா.க) – ருஷ்தியின் உதை, செஹான் முயற்சித்த எதிர் திசையினால் கோல்களுக்குள் சென்றது.
- அன்செலோ – இவரது உதை ஒரு பக்க கம்பங்களை நோக்கி செல்ல, அதனையும் கெலிஓய அகீல் பாய்ந்து சிறந்த முறையில் தடுத்தார்.
- கருனாசிங்க – இவரது உதையின்போது பந்து கோலுக்குள் செல்ல, கெலிஓய அணி கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியை மைதானம் முழுவதிலும் கொண்டாடியது.
பெனால்டி : ரட்னம் விளையாட்டுக் கழகம் 01 – 03 கெலிஓய கால்பந்து கழகம்
Thepapare.com இன் ஆட்ட நாயகன்: மொஹமட் அகீல் (கெலிஓய கால்பந்து கழகம்)
போட்டியின் பின்னர் கிண்ணத்தை வென்ற கெலிஓய அணியின் முகாமையாளர் கருத்து தெரிவிக்கையில், ”நாம் இந்த சுற்றுத் தொடர் முழுவதிலும் சிறந்த, அழகான விளையாட்டை வெளிப்படுத்தினோம். எனவே, இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. எமது வெற்றிக்கு பின்னால் இருந்து எமக்கு முழு பலத்தினையும் தந்தவர்கள் எமது ஆதரவாளர்கள்” என்று தெரிவித்தார்.
மஞ்சள் அட்டை
ரட்னம் விளையாட்டுக் கழகம் – மொஹமட் முஷர்ரப் 30’
கெலிஓய கால்பந்து கழகம் – மொஹமட் ஹசீப் 20’, கியாஸ் 62’, ஐசாக் 76’