இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதியில் கிரேட் ஸ்டார் அணியை வீழ்த்தி கெலிஓய கால்பந்து கழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இத்தொடரின் அரையிறுதியின் முதல் கட்டப் போட்டி கிரேட் ஸ்டார் அணியின் சொந்த மைதானமான பென்தொட காமினி மைதானத்தில் இடம்பெற்றது. அப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கெலிஓய கால்பந்து கழகம் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது கட்ட அரையிறுதிப் போட்டி கெலிஓய கால்பந்து கழகத்தின் சொந்த மைதானமான கண்டி போகம்பர மைதானத்தில் நடைபெற்றது.
சொந்த மண்ணில் பாடும்மீனை விழ்த்திய கொழும்பு ரட்னம்
இறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் எனில் இந்தப் போட்டியில் ஒரு அல்லது இரண்டு மேலதிக கோலினால் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் கிரேட் ஸ்டார் அணி போட்டியை ஆரம்பித்தது.
போட்டி ஆரம்பித்த முதல் சில நிமிடங்களுக்கு சாதாரணமாக விளையாடிக்கொண்டிருந்த இரு அணியினரும், பின்னர் திடீர் என்று அபாரமாக ஆடத் தொடங்கினர்.
ஆட்டத்தின் முதல் கோலைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிரேட் ஸ்டார் அணிக்கு கிடைத்தது. எனினும் அந்த வாய்ப்பை சிறந்த முறையில் நிறைவு செய்வதற்கு அவ்வணியின் முன்கள வீரர்களுக்கு முடியாமல் போனது.
போட்டியின் 22ஆவது நிமிடத்தில் கிரேட் ஸ்டார் அணியின் கோல் காப்பாளர் மற்றும் பின்கள வீரருக்கு இடையில் ஏற்பட்ட பிழையான தொடர்பாடல் காரணமாக கெலிஓய அணிக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய ராஜு சரன்ராஜ், அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
அதன் பின்னர், பெறப்பட்ட கோலுடன் எதிரணியை மட்டுப்படுத்தும் நோக்குடன் கெலிஓய அணி சிறந்த தடுப்புக்களை மேற்கொண்டு விளையாடி வந்தது. எனினும், கிரேட் ஸ்டார் அணியினர் மேலதிக கோலுடன் வெற்றி பெற வேண்டிய மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகினர்.
இவ்வாறான ஒரு நிலையில் போட்டியின் முதல் பாதி நிறைவுக்காக மூன்று நிமிடங்கள் மேலதிக நேரமாக வழங்கப்பட்டது. அந்த நேரம் கிரேட் ஸ்டார் அணிக்கு கிடைத்த அதிஷ்ட நேரமாக இருந்தது.
பின்களத்திலிருந்து உயர்த்திக் கொடுக்கப்பட்ட பந்தைப் பெற்ற கிரேட் ஸ்டார் அணியின் அனில் ஷான்த, பெனால்டி பகுதிக்கு வெளியில் இருந்து பந்தை வேகமாக உதைய, அது கோல் காப்பாளரைத் தாண்டி கோலுக்குள் சென்றது.
முதல் பாதி: கெலிஓய கால்பந்து கழகம் 01 – 01 கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்
இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பெறும் 45 நிமிடங்களாகக் கணிக்கப்பட்ட போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணியினரின் வேகமும், உட்சாகமும் முதல் பாதியை விட மிகவும் வித்தியாசமாக இருந்தது.
தமது சொந்த ஊர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் கடுமையான தடுப்புக்களை மேற்கொண்டு ஆடிய கெலிஓய அணியினரின் பந்துப் பரிமாற்றம் சிறப்பாக இருந்தது. எனினும் அதற்கு எதிராக மோதும் வகையில் எதிர்த் தரப்பும் சலிக்காமல் விளையாடினர்.
இவ்வாறான ஒரு நிலையில் போட்டியின் 52ஆவது நிமிடத்தில் கிரேட் ஸ்டார் அணி வீரர் பசிது விஷ்வஜித் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார். பின்னர் 63ஆவது நிமிடத்தில் அவ்வணியின் சக வீரர் அஸ்கார் அஹமடிற்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
எதிரணியின் தடுப்புக்களை தகர்த்தெறிந்து மற்றொரு கோல் பெறும் ஒரே நோக்குடன் ஆடிக்கொண்டிருந்த கிரேட் ஸ்டார் அணியினருக்கு 83ஆவது நிமிடத்தில் மிகச் சிறந்த வாய்ப்பொன்று கிடைத்தது.
போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும்
பெனால்டி எல்லைக்கு மிகவும் அண்மித்த பகுதியில் வைத்து அவர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, போட்டியில் ஒரு மாற்றம் ஏற்படுமா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இதன்போது, உதையப்பட்ட பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு, திசை திரும்பியது. எனவே, கிரேட் ஸ்டார் அணியினரின் இறுதி வாய்ப்பும், எதிர்பார்ப்பும் துரதிஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது.
எனவே போட்டி நிறைவில், முதல் பாதியில் பெறப்பட்ட இரண்டு கோல்கள் மாத்திரமே முழு நேர கோல்களாக இருந்தது. இதன் காரணமாக முதல் கட்ட அரையிறுதியில் பெற்ற ஒரு கோலின் உதவியுடன் கெலிஓய அணியினர் வெற்றியை தம்வசப்படுத்தி, இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.
முழு நேரம்: கெலிஓய கால்பந்து கழகம் 01 – 01 கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்
Thepapare.com இன் ஆட்ட நாயகன்: அடியு ஐசக் (கெலிஓய கால்பந்து கழகம்)
கோல் பெற்றவர்கள்
கெலிஓய கால்பந்து கழகம் – ராஜு சரன்ராஜ் 22’
கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – அனில் ஷான்த 45+2’
மஞ்சள் அட்டைகள்
கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – பசிது விஷ்வஜித் 52’, அஸ்கார் அஹமட் 63’, மொஹமட் மப்ராஸ் 87’