இந்த வருடம் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) T20 தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக்கொள்வதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடம் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் மூடிய மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் டிரினிடாட் மற்றும் டொபேகோவில் மட்டும் நடைபெற உள்ளது.
இதன்படி, குறித்த தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் 6 அணிகள் விளையாட உள்ளன.
இதில் செயின்ட் லூசியா அணியில் இடம்பெற்றுள்ள கிறிஸ் கெய்ல், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வருட CPL தொடரில் இருந்து விலகுகிறேன் என்று திடீரென அறிவித்துள்ளார்.
CPL இல் புதிய அணிக்காக விளையாடவுள்ள கிறிஸ் கெயில்
ஏற்கனவே ஜமைக்கா தல்லவாஸ், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ள கிறிஸ் கெய்ல், ஜமைக்கா அணியில் இருந்தபோது 2 முறை CPL சம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாகவும் இருந்துள்ளார்.
எனினும் அவர் ஜமைக்கா அணிக்காக கடந்த வருடம் 10 போட்டிகளில் 243 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். அதேபோல, ஜமைக்கா அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்று படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்த வருட முற்பகுதியில் ஜமைக்கா தல்லவாஸ் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்த அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதுஇவ்வாறிருக்க, ஜமைக்கா அணியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என கிறிஸ் கெய்ல் குற்றம் சாட்டினார்.
சர்வானின் நடவடிக்கை சரியில்லை. அவர் கொரோனா வைரஸை விட கொடூரமானவர் என அதிரடியாக குற்றம் சாட்டினார். கிறிஸ் கெய்லின் இந்த குற்றசாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, கிறிஸ் கெய்லின் குற்றச்சாட்டுகளை சர்வானும், ஜமைக்கா அணியும் மறுத்துவிட்டனர்.
மறுபுறத்தில் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் விதிமுறைகளை பின்பற்றாததால் கிறிஸ் கெய்ல் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் தெரிவித்தார். இதனால், தன்னுடைய பேச்சுக்கு கிறிஸ் கெய்ல் வருத்தம் தெரிவித்தார்.
இதன்படி, தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கூறியதால் கிறிஸ் கெய்ல் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என CPL நிர்வாகம் முடிவெடுத்தது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம்தான் செயின்ட் லூசியா அணியில் இணைந்து கொண்ட கிறிஸ் கெய்ல், திடீரென இவ்வருடம் நடைபெறவுள்ள CPL தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எனது விலகல் குறித்து செயின்ட் லூசியா அணி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டேன். ஊடரங்கு காரணமாக என் குடும்பத்தினைரை சந்திக்க முடியவில்லை. இப்போது கிடைக்க உள்ள வாய்ப்பை குடும்பத்தினருடன் செலவிட முடிவு செய்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.
கிறிஸ் கெய்லின் இந்த திடீர் விலகலுக்கு ஜமைக்கா அணி நிர்வாகமும், முன்னாள் விண்டீஸ் வீரர் ராம்நரேஷ் சர்வானும் கொடுத்த மனஅழுத்தம் தான் காரணம் என விமர்சனங்கள் கூறப்படுகின்றன.
ஆனால், தனது சொந்த காரணங்களுகாக விலகுவதாக கெயில் கூறுகிறார். இனிவரும் CPL தொடரில் ஆடமாட்டார் என்றும் நெருங்கிய வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் என்ன செய்ய வேண்டும்?
கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் கிறிஸ் கெய்ல், இதுவரை 2,354 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளமை சிறப்பம்சமாகும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க