இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்

869
Chris Gayle
Image courtesy - Espncricinfo

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடர்களில் இருந்து விலகியுள்ளார். எனினும், இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடர் மற்றும் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர்களில் இவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையோர் ஆசியக் கிண்ணத்தின் சம்பியனாக நாமம் சூடிய இந்தியா

பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்திருக்கும் 19 வயதின்..

உலகளாவிய ரீதியில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில்யுனிவர்ஸ் பொஸ்” (Universe Boss) என வர்ணிக்கப்படும் கிறிஸ் கெயில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் (6) ஜமைக்கா அணிக்காக விளையாடிய பின்னர் தனது ஏ நிலை (List A) கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தப் போட்டியில் ஜமைக்கா அணிக்கு தலைமை தாங்கிய கெயில், 114 பந்துகளில் 122 ஓட்டங்களை குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். இந்த நிலையிலேயே கெயில், குறித்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் தொடர்களில் இருந்து விலகிக்கொள்வதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை பொருத்தவரையில் கடந்த 2015ம் ஆண்டிலிருந்து அணியின் ஒருநாள் போட்டி முடிவுகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறித்த காலப்பகுதியில் 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 13 போட்டிகளில் மாத்திரமே மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெற்றுள்ளது. இறுதியாக 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கும், தகுதிகாண் போட்டிகள் மூலமே முன்னேறியிருந்தது. தற்போது இளம் வீரர்களை 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை அணி நிர்வாகம் முன்னேடுத்துள்ளது.

இதனடிப்படையில், கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 25 வயதான கசலதுறை வீரர் சந்ரபோல் ஹெம்ராஜ், பாபியன் எலன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஒசேன் தோமஸ் ஆகியோருடன்,  இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ள சுனில் எம்ரிஸ் ஆகியோர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், துரதிஷ்டவசமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் அதிரடி சகலதுறை வீரர் அன்ரூ ரசல் இணைக்கப்படவில்லை. உபாதை காரணமாக இவர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். எவ்வாறாயினும், நவம்பர் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ள T20 தொடரில் ரசல் விளையாடுவார் என்பதை நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.

ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு..

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தக் குளறுபடிகள் காரணமாக அணியில் விளையாடாமல் இருந்த கிரேன் பொல்லார்ட் மற்றும் டெரன் பிராவோ ஆகியோர் இந்திய அணிக்கு எதிரான T20 குழாத்தில் இடம்பிடித்துள்ளனர். பொல்லார்ட் 2017ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக T20 குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், டெரன் பிராவோ 2014ம் ஆண்டுக்கு பின்னர் T20 குழாத்துக்கு திரும்பியுள்ளார். பிராவோ, இறுதியாக 2016ம் ஆண்டு தேசிய அணியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள குழாம்களில் இம்முறை, அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என இருதரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றை கருத்திற்குகொண்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் கௌர்ட்ணி பிரவ்ன் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக் குழாம்

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), பெபியான் எலன், சுனில் எம்ரிஸ், தேவேந்திர பிசு, சந்ரபோல் ஹெம்ராஜ், ஷிம்ரோன் ஹெட்மையர், ஷாய் ஹோப், அல்ஷாரி ஜோசப், எவின் லிவிஸ், எஷ்லி நேர்ஷ், கீமொ பௌல், ரோவ்மன் பவல், கீமார் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஒசேன் தோமஸ்

T20 போட்டிக் குழாம்

கார்லோஸ் பிராத்வைட் (தலைவர்), பெபியான் எலன், டெரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மையர், எவின் லிவிஸ், ஒபேட் மெக்கோய், எஷ்லி நேர்ஷ், கெஹ்ரி பீர்ரி, கீரன் பொல்லார்ட், ரோவ்மன் பவல், தினேஷ் ராம்டீன், அன்ரூ ரசல், செர்பேன் ரதர்போர்ட், ஒசேன் தோமஸ்

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<