தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தோடு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த கிறிஸ் கெயில், தனது முடிவினை மாற்றி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடப்போவதாக தெரிவித்திருக்கின்றார்.
முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கிறிஸ் கெயில், கடந்த பெப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ணத்தோடு, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள கிறிஸ் கெயில்
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில், இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக்…
எனினும், இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ள இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டிக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த ஊடகவியாலளர் சந்திப்பில் உலகக் கிண்ணத்திற்கு பின்னரான தனது திட்டங்கள் குறித்து கருத்து வெளியிடுகையில் கிறிஸ் கெயில், இந்திய அணி ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலமே கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்பது உறுதியாகியிருக்கின்றது.
இதேநேரம் கிறிஸ் கெயில், இந்திய அணியின் சுற்றுப் பயணத்தின் போது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
கிறிஸ் கெயில் 2014 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திலேயே மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவரான ஜேசன் ஹோல்டர், ஒருநாள் போட்டிகளில் கிறிஸ் கெயிலின் மீள்வருகை தமது தரப்பிற்கு வலுச்சேர்க்கும் விடயமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார். எனினும் ஹோல்டர், கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் விளையாட சம்மதம் தெரிவிப்பார் என நினைத்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
“அவர் (ஒருநாள் போட்டிகளில் மீண்டும் விளையாடுவது தொடர்பில்) எதனையும் உடைமாற்றும் அறையில் வைத்து கதைத்திருக்கவில்லை. நானும் இப்போது தான் அறிந்திருக்கின்றேன். நான் கீழே சென்று அவருடன் மேலதிக பேச்சுக்களில் ஈடுபடப் போகின்றேன்.”
கிறிஸ் கெயில் இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாட எதிர்பார்த்திருக்கின்ற போதிலும், அதற்கு பின்னர் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என நம்பப்படுகிறது. இதனால், இந்திய அணியுடனான தொடரே கிறிஸ் கெயிலின் கடைசி ஒருநாள் தொடராக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
அரையிறுதிக்கு சென்ற போதிலும் கவனமாக இருப்போம்: ஸ்டார்க்
இங்கிலாந்து அணியினை நேற்று (26) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற உலகக்…
இந்திய – மேற்கிந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இடம்பெறும் T20 தொடரின் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கயானாவில் ஆரம்பமாகின்றது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரினை அடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி அன்டிகுவாவில் ஆரம்பமாகின்றது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரையில் 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில், 25 சதங்களுடன் 10,345 வரையில் ஓட்டங்கள் பெற்றிருக்கின்றார்.
அதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரையில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில், 42.18 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 7,214 ஓட்டங்கள் குவித்திருக்கின்றார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<