உலக மெய்வல்லுனர் 800 மீட்டரில் கயன்திகாவுக்கு ஐந்தாமிடம்

World Athletics Championship 2022

194

ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகொனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீட்டர் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட கயன்திகா அபேரட்ன, 5ஆவது இடத்தைப் பிடித்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

எனினும், 45 வீராங்கனைகள் பங்குகொண்ட தகுதிச் சுற்றில் கயன்திகா அபேரட்ன, 29ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இன்று காலை (22) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் பங்குபற்றிய 7 வீராங்கனைகளில் இலங்கையின் கயன்திகா அபேரட்ன 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

இப் போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள், 02.35 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார். அத்துடன், தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார்.

மேலும், பெண்களுக்கான 800 மீட்டரில் இலங்கை வீராங்கனையொருவர் பதிவு செய்த 2ஆவது அதிசிறந்த நேரப் பெறுமதியாகவும், இலங்கை சாதனைக்கு (2 நிமி. 01.44 செக்.) அடுத்து பதிவாகிய சிறந்த நேரப் பெறுமதியாகவும் இடம்பிடித்தது.

இதனிடையே, கயன்திகா பங்குகொண்ட போட்டியில் கீலி ஹொட்ஜ்கிங்ஸன் (பிரித்தானியா) 2.00.08 செக்., அனிடா ஹோவாட் (ஸ்லோவேக்கியா) 2.01.48 செக்., லோர் ஹோப்மேன் (சுவிட்சர்லாந்து), 2.01.63 செக். ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்து அரை இறுதிக்குத் தகுதி பெற்றனர்.

இதேவேளை, 6 சுற்றுக்களைக் கொண்டதாக நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் தகுதிச் சுற்றில் 45 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், ஒட்டுமொத்த நிலையில் கயன்திகா அபேரட்ன 29ஆவது இடத்தைப் பெற்றார்.

எவ்வாறாயினும், இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் யுபுன் அபேகோன், நிலானி ரத்நாயகவைத் தொடர்ந்து கயன்திகா அபேரட்னவும் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<