இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்ற விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்தோடு நிறைவுக்கு வந்தது. எனினும், T20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
அதன்படி ஜூன் 2ஆம் திகதி ஆரம்பகியT20 உலகக் கிண்ணத் தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிகிறது. இந்த நிலையில், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெம்மிங், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக்க பிசிசிஐ முனைப்புக் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதனை மறுத்திருந்தார்.
- இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் கௌதம் கம்பீர்?
- ஆஸி. பயிற்சியாளர்கள் எவரையும் அணுகவில்லை – BCCI
இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீரையும் தலைமைப் பயிற்சியாளராக்க பிசிசிஐ அணுகியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அபுதாபியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கௌதம் கம்பீர் பங்கேற்றார். அப்போது அவர் பயிற்pசயாளர் பதவியை ஏற்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
‘இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற நான் விரும்புகிறேன். இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை காட்டிலும் வேறெதுவும் சிறந்த கௌரவம் இருக்காது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இயங்க வேண்டி இருக்கும். இந்தியா உலகக் கிண்ணத்தை வெல்லும். அதற்கு அச்சமின்றி இருக்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர், அந்த அணிக்கு மீண்டும் சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடிய கௌதம் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 38 T20i போட்டிகளில் விளையடி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்;களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<