ICC கிரிக்கெட் குழுவின் தலைவரானார் சௌரவ் கங்குலி

398

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஆடவர் கிரிக்கெட் குழுவின் தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ICC கிரிக்கெட் குழுவின் தலைவராக இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பணியாற்றி வந்ததுடன், 2012இல் இருந்து மூன்று தடவைகள் மூன்று ஆண்டு பதவிக்காலம் அடிப்படையில் அப்பதவியை வகித்து வந்தார்.

இந்த நிலையில், அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அப்பதவிக்கு BCCI தலைவரும், முன்னாள் வீரருமான சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ICC கிரிக்கெட் குழு தீர்மானித்து வருகிறது. எனவே, கங்குலியின் அனுபவம் எதிர்வரும் காலங்களில் கிரிக்கெட் தொடர்பான முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என ICC தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பதவிக்கு சௌரவ் கங்குலியை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரெக் பார்கிளே தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 9 ஆண்டுகளாக DRS, விதிமுறையை மீறிய பந்துவீச்சு உட்பட பல முக்கியமான முடிவுகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே முன்னேற்றம் ஏற்படுத்தினார் என்று ICC தலைவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோனி கிரேவ் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் கிரிக்கெட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<