LPL தொடரில் காலி அணிக்கு புது உரிமையாளர்கள்

Lanka Premier League 2024

344

இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஐந்தாவது அத்தியாயத்தில் காலியினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அணிக்கு புதிய உரிமையாளர்கள் கிடைத்திருப்பதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LPL தொடரின் ஐந்தாவது பருவத்திற்கான போட்டிகள் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், LPL தொடரின் முதல் மூன்று அத்தியாயங்களில், காலி அணி கோல் கிளெடியேட்டர்ஸ் என்றும், இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற நான்காவது அத்தியாயத்தில் கோல் டைட்டன்ஸ் என்றும் விளையாடியிருந்தது.

இதனிடையே, இந்த ஆண்டு நடைபெறவுள்ள LPL தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் மீண்டும் புதிய உரிமையாளர்களை காலி அணி பெற்றிருக்கின்றது.

அதன்படி, காலி அணியின் புதிய உரிமையாளர்களாக தத்வா குழுமத்தின் (Tattva Group) உரிமையாளர்களான மாலவ் படேல் மற்றும் நீல் படேல், ஐக்கிய அமெரிக்காவில் இயங்குகின்ற Aanya Properties LLC நிறுவனத்தின் உரிமையாளர் ஹிமான்ஷு படேல் மற்றும் தக்கர் குழுமத்தின் (Thakkar Group) நிர்வாக இயக்குனர் பிரேம் தாக்கர் ஆகியோர் மாறியிருக்கின்றனர்.

எனவே, இந்த ஆண்டு LPL தொடரில் காலி அணியின் புதிய பெயரும், கோல் மார்வெல்ஸ் (Galle Marvels) என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பெயர் மாற்றம் குறித்து காலி மார்வெல்ஸ் அணி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், இக்குழு எதிர்காலத்தில் உலகம் முழுவதும் நடைபெறுகின்ற ஏனைய கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் இணைவதற்கும், அத்துடன் LPL தொடருடன் தொடர்ந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<