சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பார்வையாளர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தீர்மானித்துள்ளது.
இதன்படி, போட்டி நடைபெறும் நாட்களில் 4ஆம் இலக்க நுழைவாயிலில் இருந்து பார்வையாளர்கள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதனிடையே, இலங்கை – அயர்லாந்து அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி இதே காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியையும் பார்வையாளர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<