குரோஷிய அணியுடனான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி வரலாற்றில் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. அந்த அணி 20 ஆண்டுகளுக்கு முன்னரே முதல் முறை உலகக் கிண்ணத்தை வென்றது.
இதன் மூலம் முதல் முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய குரோஷிய அணி போட்டி முழுவதும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தியபோதும் அதனால் பிரான்ஸை மீண்டும் ஒருமுறை வெற்றி பெற முடியாமல் போனது. வெறுமனே 4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குரோஷியா இதற்கு முன்னர் பிரான்ஸை சந்தித்த ஐந்து போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லவில்லை.
இங்கிலாந்தின் கனவை தகர்த்து குரோஷியா முதல் முறை உலகக் கிண்ண இறுதியில்
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் லுஸ்னிக்கி அரங்கு முழுவதும் ரசிகர் திரளுடன் ஞாயிற்றுக்கிழமை (15) நடந்த இறுதிப் போட்டியில் குரோஷியாவின் ஓன் கோலுடன் கோல் பெறுவதை ஆரம்பித்த பிரான்ஸ் அணி இரண்டாவது பாதியில் ஆறு நிமிட இடைவெளியில் பொக்பா மற்றும் ம்பாப்பே போட்ட அதிரடி கோல்கள் மூலம் வெற்றியை உறுதி செய்துகொண்டது.
பிரான்ஸ் அரையிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்திய அதே அணியுடனும் குரோஷியா ரஷ்யாவை வீழ்த்திய அதே பதினொரு வீரர்களுடனும் இறுதிப் போட்டியில் களமிறங்கின.
போட்டி ஆரம்பித்து முதல் 10 நிமிடங்களில் ஆட்டம் வேகம் குறைந்திருந்தபோதும் குரோஷிய வீரர்களின் கால்களிலேயே பந்து சுழன்றுகொண்டிருந்ததோடு அந்த வீரர்கள் பிரான்ஸ் எல்லையை தொடர்ந்து ஆக்கிரமித்தனர். எட்டாவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோனர் கிக் வாய்ப்பு குரோஷிய அணிக்கு கிடைத்தது.
எனினும் 18 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்கள் குரோஷிய கோல் எல்லையை முற்றாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். அன்டொய்ன் கிரீஸ்மனிடம் பந்து சென்றபோது அவர் குரோஷிய வீரரின் தவறால் தடுக்கி விழ பிரான்ஸ் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.
கரீஸ்மன் மிக தாழ்வாக அந்த ப்ரீ கிக்கை கோலை நோக்கி உதைத்தபோது குரோஷிய வீரர் மரியோ மன்ட்சுகிக் தலையால் முட்டி வெளியே தள்ள முயன்றார். ஆனால் அந்த பந்து கோல்காப்பாளரையும் தாண்டி வலைக்குள் புகுந்தது.
இம்முறை உலகக் கிண்ணத்தில் பெறும் 12 ஆவது ஓன் கோலாக இது அமைந்ததோடு உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பெறப்பட்ட முதலாவது ஓன் கோலாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
பிரான்ஸ் இலக்கை நோக்கி ஒரு பந்தைக் கூட உதைக்காத நிலையில் பிரான்ஸ் அணி 1-0 என போட்டியில் முன்னிலை பெற முடிந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிக்காட்டிய குரோஷியா அடுத்த பத்து நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது.
பிரான்ஸின் பொனால்டி எல்லைக்குள் பந்து தலைகளால் முட்டி பரிமாற்றப்பட்டது. அப்போது பந்து இவான் பரசிக்கின் கால்களுக்கு சென்றது. அதனை அவர் தனது இடது காலால் உதைத்து குரோஷியாவுக்கு அபார பதில் கோல் பெற்றக்கொடுத்தார்.
முதல்பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் போட்டி மேலும் வேகம் பிடித்தது இரு அணிகளும் மாறிமாறி பந்தை பெற்றபோது போட்டியில் மற்றொரு பரபரப்பு தருணம் ஏற்பட்டது.
34 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அடித்த கோனர் கிக் குரோஷிய கோல் கம்பத்திற்கு மிக நெருக்கமாக வந்தபோது அது பரிசிக்கின் கையில் பட்டு வெளியே திரும்பியது. இதனால் வீடியோ உதவி தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நடுவர் பிரான்ஸுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வாழங்கினார். அந்த ஸ்பொட் கிக்கை நேராக வலைக்குள் செலுத்திய கிரீஸ்மன் பிரான்ஸ் அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார்.
பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி
உலகக் கிண்ண போட்டியில் பெறப்பட்ட ஐந்தாவது பெனால்டி கிக் வாய்ப்பு இதுவாகும். இந்த ஐந்து முறைகளிலும் கோல் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் கடைசியாக 2006இல் பிரான்சின் சினடின் சிடானே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பெனால்டி கோல் பெற்றவராவார்.
முதல் பாதி: பிரான்ஸ் 2 – 1 குரோஷியா
முதல்பாதி ஆட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு நேரம் குரோஷிய அணி வீரர்கள் வசமே பந்து இருந்தபோதும் அந்த அணியால் முன்னிலை பெற முடியாமல் இருந்ததற்கு அதிர்ஷ்டமின்மையும் காரணமாக அமைந்தது. என்றாலும் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தெளிவாக தனது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.
59 ஆவது நிமிடத்தில் கைலியன் ம்பாப்பே குரோஷிய பின்கள வீரர்களை முறியடித்து கடத்தி வந்த பந்தை கிரீஸ்மனிடம் பரிமாற அவர் அதனை கச்சிதமாக போல் போக்வாவிடம் கொடுத்தார். பெனால்டி எல்லைக்கு வெளியில் கீழ் இடது மூலையில் இருந்த போக்பா அதனை வலைக்குள் செலுத்த பிரான்ஸ் அணி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது.
அடுத்த ஆறு நிமிடத்தில் பிரான்ஸ் மற்றொரு வரலாற்று கோல் ஒன்றை புகுத்தியது. லூகாஸ் ஹெர்னான்டஸ் வழங்கிய பந்தை பெற்ற பிரான்ஸின் 19 வயது வீரர் ம்பாப்பே அதனை 22 யார் தூரத்தில் இருந்து உதைத்து கோலாக மாற்றினார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கோல் பெற்ற முதல் இளவயது வீரராக ம்பாப்பே வரலாறு படைத்தார். பீலே 1958 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது 17 வயதில் கோல் பெற்றார்.
இந்த கோல் மூலம் பிரான்ஸ் அணி போட்டியில் 4-1 என முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது பிரான்ஸ் கோல்காப்பாளரிடம் இருந்து பந்தை பறித்த மாரியோ மன்ட்சுகிக் அதனை வலைக்குள் செலுத்தி குரோஷியாவுக்கு எதிர்பாராத கோல் ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.
உலகக் கிண்ண வரலாற்றி ஒரே போட்டியில் ஓன் கோலும், கோலும் பெற்ற இரண்டாவது வீரர் மன்ட்சுகிக் ஆவார். இதற்கு முன் 1978 ஆம் ஆண்டு நெதர்லாந்து வீரர் ஏர்னி ப்ரான்ட்ஸ் இவ்வாறு கோல்கள் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குரோஷிய அணி கடைசி நிமிடங்களில் வெற்றிக்காக போராடியபோதும் அது சாத்தியப்படவில்லை. பிரான்ஸ் அணி குரோஷியவை விட நிதானமாக ஆடி கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டதே அந்த அணி உலக சம்பியனாக காரணமானது.
போட்டியின் முழு நேரம் முடிந்து இறுதி விசில் ஊதப்பட்டபோது பிரான்ஸ் பக்கம் இருந்து உலகக் கிண்ணத்தை வென்ற கொண்டாட்டம் ஆரம்பமானது.
1970 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரேசில் அணி இத்தாலியை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 கோல்கள் பெற்ற முதல் அணியாக பிரான்ஸ் அணி இருந்ததோடு 1974 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதல் முறை ஆடி தோற்ற அணியாக குரோஷியா பதிவானது.
1998 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் தலைவரான டிடியர் டிஸ்சம்ப்ஸ் இம்முறை அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார். இதன் மூலம் வீரராகவும் பயிற்றுவிப்பாளராகவும் உலகக் கிண்ணத்தை வென்ற மூன்றாமவராக அவர் பதிவானார். இதற்கு முன்னர் பிரேசிலின் மரியோ சகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரன்ஸ் பெகன்பேர்க் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
உலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்படும் விருதுகள்
இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிகபட்சமாக ஆறு கோல்களை பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹெரி கேனுக்கு தங்கப்பாதணி விருது கிடைத்ததோடு பெல்ஜியத்தின் திபவுட் கோர்டொயிஸ் தங்க கையுறையை தட்டிக் சென்றார். நியாயமான ஆட்டத்தை வெளிக்காட்டியதற்கான பிஃபா விருது ஸ்பெயின் அணிக்கு கிடைத்தது.
எனினும் பிஃபா உலகக் கிண்ணத்தின் முக்கிய தனிநபர் விருதான தங்கப்பந்து விருதை குரோஷிய அணித்தலைவர் லூகா மொட்ரிக் வென்றார். இறுதிப் போட்டியில் சாதனை கோல் புகுத்திய ம்பப்பேவுக்கு பிஃபாவின் இளம் வீரருக்கான விருது கிடைத்தது.
முழு நேரம்: பிரான்ஸ் 4 – 2 குரோஷியா
கோல் பெற்றவர்கள்
பிரான்ஸ் – மரியோ மன்ட்சுகிக் 18′ (ஓன் கோல்), அன்டொய்ன் கிரீஸ்மன் 38’ (பெனால்டி), போல் போக்பா 59′, கைலியன் ம்பாப்பே 65′
குரோஷியா – இவான் பரிசிக் 28′, மரியோ மன்ட்சுகிக் 69′
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க