நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் வடக்கைச் சேர்ந்த 3 வீராங்கனைகளும், மலையகத்தைச் சேர்ந்த ஓரு வீராங்கனையும் என நான்கு தமிழ் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நாளை (17) முதல் 30 ஆம் திகதி வரை 7 நாடுகள் பங்குபற்றுகின்ற தெற்காசிய மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.
இரண்டு குழுக்களாக நடத்தப்படும் இம்முறை போட்டித் தொடரில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் A குழுவிலும், வரவேற்பு நாடான நேபாளம், இலங்கை, மாலைதீவுகள், பூட்டான் ஆகியன நாடுகள் B குழுவிலும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.
இம்முறை போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்ட 23 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் அணியின் தலைவியாக துஷானி மதுஷிக்கா செயல்படவுள்ளார். அதேபோல, நான்கு தமிழ் வீராங்கனைகளுக்கும் இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் தெல்லிப்பழை மகாஜனா மகாஜனக் கல்லூரியின் முன்னாள் கால்பந்தாட்ட வீராங்கனைகளான பாஸ்கரன் சானு, சிவநேசன் தர்மிகா, சுரேந்திரன் கௌரி ஆகிய மூவரும் இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர் இவர்கள் மூவரும் பாடசாலை கால்பந்;தாட்ட அணிகளுக்கு தலைமைதாங்கியதோடு, பாடசாலை காலத்தில் வயதுப் பிரிவுகளுக்கான தேசிய அணிகளிலும் இடம்பிடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சால் நடாத்தப்படுகின்ற பாடசாலைமட்ட கால்பந்தாட்டத் தொடரில் மகாஜனக் கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2019 இல் முதன்முறையாக சம்பியன் பட்டம் வென்ற போது, தர்மிகா அணித்தலைவியாகவும், கௌரி அணியின் உபதலைவியாகவும், சானு முன்னாள் அணித்தலைவியாகவும் சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
அதேபோல, பதுளை, ஹாலி எலயைச் சேர்ந்த செல்வராஜ் யுவராணியும் இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த 4 தமிழ் வீராங்கனைகளில் சானு, யுவராணி ஆகிய இருவரும் இலங்கை மகளிர் அணிக்காக ஏற்கனவே விளையாடியிருந்தாலும், கௌரி, தர்மிகா ஆகிய இருவரும் தேசிய கால்பந்து மகளிர் அணியில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். அதுமாத்திரமின்றி, கௌரி, தர்மிகா மற்றும் யுவராணி ஆகிய மூவரும் இலங்கை கனிஷ்ட கால்பந்து அணிக்காகவும் விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
- உலக கால்பந்து தரவரிசையில் இலங்கை அசுர முன்னேற்றம்
- திரில் வெற்றியுடன் AFC ஆசியக்கிண்ண குவாலிபையருக்கு தகுதிபெற்ற இலங்கை!
- ஆஸி. கால்பந்து அணியில் கலக்கும் இலங்கை வம்சாவளி தமிழர்
இலங்கை மகளிர் அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி மாலைதீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து 21ஆம் திகதி பூட்டாளையும், 24ஆம் திகதி நேபாளத்தையும் இலங்கை அணி சந்திக்கவுள்ளது.
இதேவேளை, இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக மொhஹமட் ஹசன் ரூமியும், அணியின் உதவிப் பயிற்சியாளராக ரட்னம் ஜஸ்மினும் செயல்படவுள்ளனர்.
இலங்கைக் குழாம்
துஷானி மதுஷிகா (தலைவி), பிரான்சிஸ் சலோமி, மஹேஷிகா குமுதினி, ஷஷிகா மதுவன்தி, சக்குரா செவ்வந்தி, ப்ரவீனா மாதுக்கி, ஹிமாயா சச்சினி, அச்சலா சஞ்சீவனி, ஷானிக்கா மதுமாலி, பூர்ணிமா சந்தமாலி, செல்வராஜ் யுவராணி, இஷன்கா அயோமி, மதுபாஷினி நவஞ்சனா, பாஸ்கரன் சானு, இமாஷா ஸ்டெஃப்னி, கீதாஞ்சலி மதுஷானி, இமேஷா அநுராதினி, டிலினிக்கா லோச்சனி, சுரேந்திரன் கௌரி, சிவனேஸ்வரன் தர்மிகா, கே. இமேஷா, தாரிதி ரன்ஷாரி, சந்துனி செவ்மினி.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<