சீனாவின் ஜியாக்ஷின் நகரில் நடைபெறவுள்ள ஆசிய மரதன் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் இலங்கை குழாத்தில் மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் இடம்பிடித்துள்ளார்.
சீனாவின் ஜியாக்ஷின் நகரில் இன்று (30) நடைபெறும் 19ஆவது ஆசிய மரதன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இலங்கை அணியில் நான்;கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் பிரிவுக்காக டி.என். ரத்னபால மற்றும் குமார் சண்முகேஸ்வரன், பெண்கள் பிரிவுக்காக வத்ஸலா ஹேரத் மற்றும் நிமேஷா நிதர்ஷனி ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்றனர்.
இந்த வீரர்களில் டி.என். ரத்னபால இலங்கை விமனாப்படைக்காவும், ஏனைய 3 வீரர்களும் இலங்கை இராணுவத்திற்காகவும் விளையாடி வருகின்றனர்.
ஜப்பானின் டோக்கியோவில் எதிர்வரும் செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற இலங்கை வீரர்கள் இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தேசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தங்கம் வென்றார் சண்முகேஸ்வரன்
- 2025 ஐ வெற்றியுடன் ஆரம்பித்த யுபுன், தருஷி
- புது வரலாறு படைத்த ஒமெல்; கஜானன், கமில்டன், ஜதுர்சிகாவுக்கு முதல் பதக்கம்
இலங்கையின் சிரேஷ்ட மெய்வல்லுனர் பயிற்சியாளரும், தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் தலைவருமான சஜித் ஜயலால் இந்தப் போட்டியில் பங்குபற்றுகின்ற இலங்கை அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
1988 இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட ஆசிய மரதன் சாம்பியன்ஷிப்பில் இதுவரை பதக்கம் வென்ற ஒரே இலங்கையர் சரத் பிரசன்ன கமகே ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற 7ஆவது ஆசிய மரதன் சாம்பியன்ஷிப்பில் 2 மணித்தியாலம் 28 நிமிடம் 25 செக்கன்களில் ஓடிமுடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதனிடையே, மரதன் போட்டியைப் பொறுத்தமட்டில் ஆண்கள் பிரிவில் இலங்கையின் தேசிய சாதனையை அனுருத்த இந்திரஜித் குரே (2 மணித்தியாலம் 13 நிமிடம் 47 செக்கன்கள்: 2015 – லண்டன்) மற்றும் பெண்கள் பிரிவில் தேசிய சாதனையை ஹிருணி விஜேரத்ன (2 மணித்தியலாயம் 34 நிமிடம் 10 செக்கன்கள்: 2019 – ஜெர்மனி) வைத்திருக்கின்றனர்.
இதனிடையே, இலங்கை கடைசியாக கடந்த டிசம்பர் முதலாம் திகதி மகாவோவில் நடைபெற்ற சர்வதேச மரதன் போட்டியில் பங்கேற்க இருந்த போதிலும், விசா பிரச்சினை காரணமாக இலங்கை அணி வீரர்கள் அந்த நாட்டை சென்றடைந்த பின்னர் விமான நிலையத்திலேயே வைத்து திருப்பி அனுப்பப்பட்டது. அந்த சுற்றுப்பயணத்திற்காக மகாவோ நோக்கி புறப்பட்ட இலங்கை அணியில் தற்போது ஆசிய மரதன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சீனா சென்றுள்ள டி.என். ரத்னபால, வத்ஸலா ஹேரத் மற்றும் பயிற்சியாளர் சஜித் ஜயலால் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய மெய்வல்லுனர் சங்கம் மற்றும் சீன மெய்வல்லுனர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய மரதன் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் சுமார் 300 மெய்வல்லுனர் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<