இந்த ஆண்டு நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் ஆடவுள்ள 6 அணிகளாலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் வீரர்கள் ஏலத்துக்கு முன்னதாக நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இம்முறை கரீபியர் பீரிமியர் லீக் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 4 வீரர்கள் விiயாடவுள்ளனர். பானுக ராஜபக்ஷ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் அந்தந்த அணிகளால் தக்க வைக்கப்பட, வனிந்து ஹஸரங்க, மற்றும் நுவன் துஷார ஆகிய இருவரும் வீரர்கள் ஏலத்திற்கு முன் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
செயின்ட் லூசியா கிங்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டுள்ள முன்னணி வீரர்களில் ஒருவராக இலங்கை கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக ராஜபக்ஷ இடம்பெற்றுள்ளார்.
பானுக்க ராஜபக்ச மற்றும் தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன், ஆப்கானிஸ்தானின் சுழல்வீரர் நூர் அஹ்மட், நமீபியாவின் வேகப்பந்து சகலதுறைவீரர் டேவிட் வீஸே, தென்னாபிரிக்காவின் முன்னாள் நட்சத்திர வீரர் பாப் டூ பிளெசிஸ் ஆகியோரும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
எனினும், அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நியூசிலாந்தின் முன்னணி துடுப்பாட்ட நட்சத்திரமான கொலின் மன்ரோ, ஜிம்பாப்வே வீரர்களான சிக்கன்தர் ராசா மற்றும் ஷோன் வில்லியம்ஸ் ஆகிய வீரர்கள் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியினால் விடுவிக்கப்பட்டிருக்கின்ற அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான ஜொன்சன் சார்ள்ஸ், ரொஸ்டன் சேஸ் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகிய முன்னணி வீரர்கள் செயின்ட் லூசியா அணியினால் தக்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ள பானுக்க ராஜபக்ஷ
- தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர், புதிய பெயர் அறிவிப்பு
- இலங்கை – மே.தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!
இதனிடையே, இம்முறை கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் பார்படோஸ் றோயல்ஸ் அணிக்காக இலங்கையின் சுழல் நட்சத்திரம் மஹீஷ் தீக்ஷன, தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர்களான குயிண்டன் டி கொக், டேவிட் மில்லர் ஆகியோர் மீண்டும் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
23 வயதான தீக்ஷன இதுவரை கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடவில்லை. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஆனால் அவருக்கு விளையாட இலங்கை கிரிக்கெட் சபையினால் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல, கடந்த ஆண்டும், ஆசியக் கிண்ணத்தில் விளையாட வேண்டியிருந்ததால், கரீபியன் பிரீமியர் லீக்கில் இருந்து மஹீஷ் தீக்ஷன வெளியேறினார்.
இது தவிர, மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் றோவ்மன் பவல் பார்படாஸ் றோயல்ஸ் அணிக்காக தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்.கைட்ஸ் அன்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணி இலங்கை T20i அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்கவை ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக இவர் கடந்த 2021ஆம் ஆண்டும் இந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும், ஆசியக் கிண்ணத் தொடர் காரணமாக அவருக்கு பங்குபற்ற முடியாமல் போனது.
மேலும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷாரவும் சென்.கைட்ஸ் அன்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இம்முறை கரீபியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<