டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இன்று களமிறங்கும் 4 இலங்கை வீரர்கள்

UAE Grand Prix 2024

168
UAE Grand Prix 2024

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் நோக்கில் இன்று (03) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ள டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அதி சிறந்த 4 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கை நேரப்படி இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ள பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க களமிறங்கவுள்ளார். இதனிடையே, இலங்கையின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் இரவு 7.50 மணிக்கு நடைபெறவுள்ள ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

அதேபோல, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய சம்பியனான தருஷி கருணாரத்ன மற்றும் கயந்திகா அபேரத்ன ஆகிய இருவரும் இலங்கை நேரப்படி இரவு 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

இறுதியாக கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நதீஷா ராமநாயக்க, அண்மையில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 400 மீற்றர் ஓட்டத்தை 53.22 செக்கன்களில் நிறைவு செய்தார், மேலும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கான அடைவு மட்டம் 50.95 செக்கன்களாகும். தற்போது உலக தரவரிசையில் 52வது இடத்தில் உள்ளார்.

இதனிடையே அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற புளோரன்ஸ் ஸ்பிரிண்ட் திருவிழாவில் ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டத்தை 15.90 செக்கன்களில் ஓடி முடித்து யுபுன் அபேகோன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். எவ்வாறாயினும், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான அடைவு மட்டம் 10 செக்கன்களாகும்.

இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.14 செக்கன்களில் ஓடி வெண்கலப் பதக்கத்தை யுபுன் அபேகோன் வென்று கொடுத்ததுடன், பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கைக்கு 24 வருடங்களின் பின்னர் மெய்வல்லுனர் பதக்கத்தை வென்று கொடுத்த வீரராக அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் விழாவில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவும், முன்னாள் தேசிய சம்பியனான கயந்திகா அபேரத்னவும் முதல் தடவையாக சர்வதேசப் போட்டியொன்றில் சந்திக்கவுள்ளனர். அதேபோல, பெண்களுக்கான 800 மீற்றரில் இலங்கை வீராங்களையொருவரால் இதுவரை பதிவு செய்யாத ஒரு நிமிடமும் 59.30 செக்கன்கள் என்ற காலப்பகுதிக்குள் போட்டியை நிறைவு செய்ய இருவரும் எதிர்பார்த்துள்ளனர்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 48 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 27 பேர் உரிய அடைவு மட்டத்தைப் பூர்த்தி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்கள். எனவே, எஞ்சியுள்ள 21 இடங்களுக்கும் உலக தரவரிசைப்படி வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன உலக தரவரிசையில் 62ஆவது இடத்தில் உள்ளதால், இன்று ஆரம்பமாகவுள்ள டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவருக்கு தரவரிசையில் முன்னிலை பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்ன இதுவரை உலக தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இதேவேளை, பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறுவதற்கான கடைசி திகதி எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<