பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல் சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகிய விடயம் ஒன்று தொடர்பில் போதிய விளக்கம் அளிக்க தவறிய காரணத்தினால், தனது நாட்டு கிரிக்கெட் சபை (PCB) மூலம் அடுத்த மூன்று வருடங்களிலும் கிரிக்கெட் போட்டிகளில் எதிலும் விளையாட முடியாதவாறு தடையினைப் பெற்றிருக்கின்றார்.
>> தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் உமர் அக்மல்
இந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சுபர் லீக் தொடருக்கு முன்னர் உமர் அக்மலினை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பில் உமர் அக்மலிடம் விளக்கம் கோரப்பட்டது. 30 வயதான அவர், போதிய விளக்கம் அளிக்கத் தவறியதோடு, தன்னை குற்றமற்றவர் எனவும் நிரூபிக்கத் தவறினார். இதனால், அக்மலிற்கு தனது நாட்டு கிரிக்கெட் சபையின் மூன்று வருட போட்டித்தடை கிடைத்திருந்தது.
தனக்கு விதிக்கப்பட்ட இந்த தடைக்கு எதிராக உமர் அக்மல் மேன்முறையீடு செய்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அக்மலின் மேன்முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான பக்கீர் மொஹமட் கோக்காரினை தற்போது நியமனம் செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
உமர் அக்மல், தனது தடை தொடர்பான விடயத்திற்கு பாகிஸ்தான் பிரதமருக்கு பாராளுமன்ற வியடங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் சட்ட நிறுவனத்தின் உதவியினை நாடியிருந்தார். தற்போது, இந்த நிறுவனத்தின் செயற்பாடு மூலமே அக்மலிற்கு மேன்முறையீட்டை முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
இதேநேரம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உமர் அக்மலின் மேன்முறையீட்டை விசாரிக்கவுள்ள நீதிபதி, முறையீட்டை விசாரிப்பதற்கான திகதியொன்றை தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்திருப்பதோடு, குறித்த திகதியில் உமர் அக்மலின் மேன்முறையீடு தொடர்பிலான விளக்கம் கேட்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னரும், பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் உமர் அக்மல், பாகிஸ்தான் ஒருநாள், T20 அணிகளின் தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பாபர் அசாமின் உறவினர் ஆவார்.
இதேவேளை, பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் ஆடிய உமர் அக்மல் போட்டித் தடையினைப் பெற முன்னர், பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும், 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 T20 போட்டிகளிலும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<