துலிப் சமரவீரவுக்கு 20 ஆண்டுகள் கிரிக்கெட் தடை

85
Dulip samaraweera banned from coaching

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

இதன்படி, சமரவீர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற மகளிர் பிக் பாஷ் லீக், ஆடவர் பிக் பாஷ் லீக் அணிகள் உட்பட மாநில அல்லது பிராந்திய கிரிக்கெட் சங்கங்களில் எந்தவொரு பதவியும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

52 வயதான அவர் விக்டோரியா மாநில கிரிக்கெட் சங்கத்தில் இருந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்தே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான துலிப் சமரவீர, முதலில் 2008ஆம் ஆண்டு அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியாற்றினார். அதன்பிறகு நவம்பர் 2023 இல், அவர் அந்த அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், எனினும், கடந்த மே மாதம், அவர் நிரந்தரமாக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், துலிப் சமரவீர பதவியேற்ற இரண்டு வாரங்களில் குறித்த பதவியை இராஜினாமா செய்தார். அதற்குக் காரணம், தனது சகோதரரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீரவை உதவிப் பயிற்றுவிப்பாளராக நியமிக்க அவர் மேற்கொண்ட முயற்சி, மாநில அணியின் கொள்கைகளுக்கு உட்பட்டதாக இருக்கவில்லை என தெரியவந்தது.

எனினும் இது தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் அல்லாமல் அவருக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடத்தை விதிகள் 2.23-ஐ மீறி அவர் நீண்ட காலமாக பெண் வீராங்கனையிடம் தகாத நடத்தையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அத்து 20 ஆண்டுகள் தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

‘அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும், விக்டோரியா மாநிலத்தின் கிரிக்கெட் சபையும் அனைத்து வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்க உறுதிபூண்டுள்ளன, மேலும் தவறாக நடத்தப்பட்டவர்களின் நலன் மிக முக்கியமானது’ என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விக்டோரியா கிரிக்கெட் சபையும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, மாநில மகளிர் திட்டத்துடன் பணிபுரிந்த துலிப் சமரவீரவுக்கு தடை விதிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எடுத்த முடிவுக்கு தாங்களும் வலுவான ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.

‘இந்த நடத்தை முற்றிலும் கண்டிக்கத்தக்கது, கிரிக்கெட் விக்டோரியா நிற்கும் அனைத்தையும் காட்டிக்கொடுப்பதாக இது உள்ளது என்பதே எங்கள் கருத்து’ என்று விக்டோரியா கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் கம்மின்ஸ் கூறினார்.

‘இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர் இது குறித்து பேச முன்வந்தபோது நம்பமுடியாத தைரியத்தை காட்டியுள்ளார். மைதானத்திலும் வெளியிலும் அவரது இலக்குகளை அடைய எங்களின் தொடர்ச்சியான ஆதரவை தொடர்ந்து வழங்குவோம்’ என்றும் அவர் கூறினார்.

துலிப் சமரவீர இலங்கைக்காக 5 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்சியாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<