இலங்கையின் ஆசிய கிண்ண தோல்வி குறித்து முன்னாள் வீரர்களின் நிலைப்பாடு

3399

ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

கடந்த 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகிய 14ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 124 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தீர்மானமிக்க லீக் போட்டியிலும் 91 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி முதல் சுற்றுடன் வெளியேறியது.

இலங்கை ஒருநாள் குழாமிலிருந்து மெதிவ்ஸ்,மெண்டிஸ் நீக்கம் : குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் …

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்குள் நடைபெற்ற ஒரு நாள் போட்டிளில் இலங்கை அணி ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளிடன் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, அரவிந்த டி சில்வா, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரஸல் ஆர்னோல்ட், ரொஷான் மஹனாம உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் இலங்கை அணியின் தோல்வி குறித்து அதிருப்தியையும், ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தனர்.

சனத், அரவிந்த கவலை

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் படுதோல்வியுடன் வெளியேறிய இலங்கை அணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் ஜாம்பவான்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆசிய கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த (1200) வீரர்களில் முன்னிலையில் உள்ள இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தேர்வுக் குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய, இம்முறை ஆசிய கிண்ணத்தில் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராக உள்ளார். அவர் இலங்கை அணியின் பின்னடைவு குறித்து இந்தியாவின் ஹிந்துஸ்தான் நாளிதழுக்கு கருத்து வெளியிடுகையில்,

”இம்முறை ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணி முதல் சுற்றுடனே வெளியேறியது மிகவும் வேதனை அளிக்கிறது. தற்போது இலங்கையின் கிரிக்கெட் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதைவிட மோசமான சூழ்நிலையை இலங்கை அணி இதற்கு முன் சந்தித்தது இல்லை. எனவே, எம்மால் இலங்கை அணி தொடர்பில் பெருமைப்பட முடியாது. விக்கெட்டுக்கள் இடையே ஓடி ஓட்டங்களைக் குவிக்க முடியாத நிலைக்கு எமது வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 டில்ஷானின் அதிரடி அறிவிப்பு

உதாரணமாக, விக்கெட்டுக்கள் இடையே ஓடும்போது நானும், அரவிந்த டி சில்வாவும் எப்போதும் கண்களால் சைகை செய்து கொள்வோம். ஆனால், தற்போது உள்ள வீரர்களுக்கு இடையில் அவ்வாறானதொரு புரிந்துணர்வு இல்லாததை காண முடிகின்றது. அதேபோல, இலங்கை வீரர்கள் சின்னச் சின்ன தவறுகளையும் தொடர்ந்து செய்தமை இந்த தோல்விக்கு காரணமாகவும் இருந்தது.

இந்த தொடரில் ரோஹித் சர்மா, சொயிப் மலிக் போன்ற வீரர்கள் தமது அனுபவத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதேபோல ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் போன்ற அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, பிரச்சினைகளை சரிசெய்யாத வரை இலங்கை அணி முன்னோக்கிச் செல்வதில் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் எட்டு அணிகளும், உலகக் கிண்ணத்தில் 10 அணிகள் மாத்திரமே விளையாடி வருகின்றன. எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இந்தத் தொடர்களில் இருந்தும் வெளியேற நேரிடும். தற்போதுள்ள கத்துக்குட்டி நாடுகளும் தமது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த நாட்களில் எந்த அணியையும் எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.

இதேவேளை, இந்தியாவின் ஹிந்துஸ்தான் நாளிதழுக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ”இந்த நேரத்தில் துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என அனைத்து பிரிவிலும் நாம் மோசமாக செயற்பட்டு வருகின்றோம். அதேபோல உடற்தகுதியிலும் எமது வீரர்கள் மிக மோசமாக செயற்பட்டு வருவது கவலையளிக்கிறது.

நான்காவது இலக்கத்தில் விளையாடுகின்ற குசல் மெண்டிஸை ஏன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறக்குகின்றனர்?  அவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அல்ல. மத்திய வரிசையில் விளையாடுவதற்கான நுட்பங்கள் அவரிடம் உண்டு. இவைகளைத்தான் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், இலங்கை அணி வகுத்த உத்திகள் தவறாக முடிந்துவிட்டன. போட்டியில் தோல்வி என்பது ஒரு பகுதி தான். சரியான வழிமுறை இல்லாமல் விளையாடியுள்ளனர். பந்துவீச்சில் மாலிங்க சிறப்பாக செயற்பட்டார். உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், இலங்கை அணியின் இந்த தோல்வியானது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். எனவே, சரியான உத்திகளைக் கையாண்டு அணியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்” என தெரிவித்தார்.

மஹேலவின் வேண்டுகோள்

இம்முறை ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணி விளையாடிய விதம் குறித்து ரசிகர்களைப் போல தானும் வெட்கப்படுவதாகத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, தொடர்ந்து இலங்கை அணிக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர்களை அடுத்தடுத்த தொடர்களின் சிறப்பாக விளையாட வைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக இலங்கை வீரர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற கேலிகள் மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது அவர்கள் தவறு செய்ததை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதை தனிப்பட்ட விடயமாக பார்க்க வேண்டாம். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. நிச்சயமாக இலங்கை அணியின் தோல்விகளுக்கு விரைவில் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுதான் வெற்றிக்கு சிறந்த வழி என்றார்.

இதேநேரம், அழுக்குப் படிந்த ஆடைகளை ஒருபோதும் மக்கள் முன்னிலையில் கழுவ வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்தும் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி அளிக்காது எனவும், இலங்கை கிரிக்கெட்டுக்கு தற்போது என்ன தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சங்கக்காரவின் நம்பிக்கை

சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி வீரர்கள் மீண்டும் வழமையான போர்முக்கு திரும்புவார்கள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

இம்முறை ஆசிய கிண்ணப் போட்டிகளில் வர்ணனையாளராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சங்கக்கார, இலங்கை ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அணி வீரர்கள் மீண்டும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், தமது பெறுமதி என்ன என்பதை ஒவ்வொரு வீரரும் புரிந்துகொண்டு விளையாட வேண்டும். இதற்கு பயிற்சியாளர், தலைவர், அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அணியில் ஒருசில மாற்றங்கள் இடம்பெற வேண்டும். அகில தனன்ஜயவுக்கு பக்கபலமாக இருப்பதற்கு மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் ஒருவரை அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் சகலதுறை வீரர்கள் இருவர் விளையாடடுவதற்கான அவசியம் இல்லை என்பதுதான் எனது நிலைப்பாடாகும்.

தற்போது இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் ஒப்பிடும் போது எம்மிடம் குறைந்தளவு வளங்களே உள்ளன. எனவே, எம்மிடம் உள்ள வளங்களைக் கொண்டு அதியுச்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நிச்சயம் எம்மால் முன்னேற்றம் காண முடியும். வீரர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். எவ்வாறியினும், ஓர் அணியாக மிக விரைவில் நாம் புத்துயிர் பெறுவோம் என சங்கக்கார தெரிவித்தார்.

அதேபோல, முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் இரண்டாவது …

ரஸல் ஆர்னோல்ட்டின் யோசனை

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை நோக்கிச் செல்வதை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கவலையாக இருப்பதாக முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரஸல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு கருத்து வெளியட்டிருந்த ரஸல் ஆர்னோல்ட், அண்மைக்காலத்தில் இலங்கை அணிக்கு சந்திக்க நேரிட்ட மிகப் பெரிய பின்னடைவு இதுவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை ஒரு நாள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக திமுத் கருணாரத்ன விளையாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, விளையாட்டில் பின்னடைவுகள், தோல்விகள் என்பது ஏற்படுவது வழக்கமான விடயம் என குறிப்பிட்ட அவர், கடந்த சில தினங்களுக்கு முன் உலக றக்பி சம்பியன் நியூசிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணில் வைத்து முதற்தடவையாக தென்னாபிரிக்க அணி வீழ்த்தியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ரொஷான் மஹானாம ஆதங்கம்

இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன்று கவலை அளிக்கிறது அல்லது வெட்கமளிக்கிறது என முன்னாள் வீரர் ரொஷான் மஹனாம தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அடைந்த தோல்வி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டிகளைப் பார்க்கும் சகல சந்தர்ப்பங்களிலும் ஒன்று நாம் கவலைப்படுகிறோம் அல்லது வெட்கப்படுகிறோம். ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தோம் என்பதை என்னால் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாமல் உள்ளது. வெற்றி தோல்வியை நாம் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் தோல்வி அடைந்த விதத்தை பத்திரிகைகளில் காணும் விதம், என்னால் தாங்கிக்கொள்ள முடியாதளவு வேதனையளிக்கிறது. நமது வீரர்களுக்கும் இந்த நிலைமை புரிய வேண்டும்.

அதனைவிட நிர்வாகிகளுக்கு புரிய வேண்டும். எமது இந்த விளையாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுசென்றமைக்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். இது தொடர்பில் சகலரும் சிந்தித்து, தாம் இதனைவிட சிறந்த பலனை கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். மிகுந்த கவலையுடனும் வருத்தத்துடனும் நான் பேசுகின்றேன். ஏனென்றால், எமது குழுவில் 3 அணிகள் இடம்பெற்றன. இலங்கை அணி நாடு திரும்புகின்றமை வருத்தமளிக்கிறது என ரொஷான் மஹனாம மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…