இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி துடுப்பாட்டவீரரும் பயிற்சியாளருமான இயன் பெல், இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது<<
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த வார இறுதியில் ஆரம்பமாகவிருக்கும் நிலையிலேயே இயன் பெல் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக காணப்படும் சனத் ஜயசூரிய இங்கிலாந்தின் சூழ்நிலைகளை அறிந்த ஒருவர் தேவை என இலங்கை கிரிக்கெட் சபையிடம் (SLC) விடுத்த வேண்டுகோளிற்கு அமையவே இயன் பெல் இலங்கை அணியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
ஏற்கனவே இங்கிலாந்தின் பயிற்சியாளர்களில் ஒருவராக செயற்பட்டு வீரராகவும் ஆடிய அனுபவம் கொண்டிருக்கும் இயன் பெல் இலங்கை அணிக்கு இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய பெறுமதியான அனுபவத்தினை பகிர்வார் என நம்பப்படுகின்றது.
இதேவேளை இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி மன்செஸ்டரில் ஆரம்பமாகவிருப்பதோடு, குறிப்பிட்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கை வீரர்கள் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியிலும் ஆடுகின்றனர். இந்தப் பயிற்சிப் போட்டி இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<