ஓய்வு முடிவை அறிவித்த இங்கிலாந்து நட்சத்திர வீரர் இயென் பெல்

268
Getty image

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இயென் பெல், தற்போது நடைபெற்று வருகின்ற கவுண்டி பருவகாலத்துடன் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இயென் பெல் இங்கிலாந்து அணிக்காக 2004ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார். அந்த அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த இவர், டெஸ்ட் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி அந்த அணிக்காக பல தடவைகள் தனித்து நின்று அணிக்கு வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் நடைபெற்ற பல தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார்.  

விறுவிறுப்பான போட்டியில் இங்கிலாந்து வெற்றி

இதில் 2006ஆம் ஆண்டு .சி.சிஇன் வளர்ந்துவரும் வீரருக்கான விருதினை இவர் பெற்றார். இவரது கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த விருது மிகவும் உதவிக்கரமாக இருந்தது. மேலும், .சி.சிஇன் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தையும் அவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் பதினொரு வருடங்கள் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்த இவர், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான தொடருக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் எதிலும் இடம்பெறவில்லை. இருப்பினும் கவுன்டி போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

மேலும், வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை ஐந்து தடவைகள் வென்ற மூன்று இங்கிலாந்து வீரர்களில் ஒருவராக இடம்பிடித்த அவர், 2012இல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியாவை வெள்ளையடிப்பு செய்து வரலாறு படைத்த இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்திருந்தார்.  

தற்போது 38 வயதாகும் இயெல் பெல், தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (05) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்

Video – சென்னை சுப்பர் கிங்ஸ் vs Suresh Raina நடந்தது என்ன?|Sports RoundUp – Epi 130

இதன்படி, தற்போது வோர்விக்ஷெயார் கழகத்துக்காக விளையாடி வருகின்ற கவுண்டி பருவகாலம் தான் அவருடைய கடைசிப் போட்டியாக அமையவுள்ளது.  

தனது ஓய்வு குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் கூறுகையில், இத்தனை வருடங்கள் இங்கிலாந்து அணிக்காகவும், கவுன்டி போட்டிகளிலும் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னுமும் கிரிக்கெட்டிற்காக பலவற்றை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறேன்.  

ஆனால் அதற்காக உடல் எனக்கு ஒத்துழைக்க வேண்டும். எனது உடலில் சற்று தளர்வு ஏற்பட்டு இருப்பதை நான் உணர்கிறேன். இதுவே ஓய்வு பெறுவதற்கான சரியான தருணம் எனவும் நான் நினைக்கிறேன்.

இங்கிலாந்து மற்றும் வோர்விக்ஷெயார் கழகம் ஆகிய இரண்டிற்கும் விளையாடும் எனது சிறுவயது கனவை நிறைவேற்றுவது ஒரு முழுமையான பாக்கியமாகவும், மரியாதையாகக் கருதுகிறேன்

சிறு பிள்ளையாக இருந்த போது, இவ்விரண்டு அணிகளுக்கும் ஒரு முறையாவது விளையாடுவது எனக்குப் போதுமானதாக இருந்திருக்கும், ஆனால் கடந்த 22 வருடங்களாக அவ்வாறு விளையாட கிடைத்தமை நான் விரும்பியதை விட அதிகம்

எனது முழு கிரிக்கெட் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் எனது சிறுவயது கழகத்துக்காக சம்பியன் பட்டங்களை வென்று கொடுக்க கிடைத்தமையிட்டு நானும் எனது குடும்பத்தினரும் பெருமிதம் கொள்கிறோம். வோர்விக்ஷெயார் கழகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும்; இந்த நேரத்தில் நான் பணியாற்றிய ஊழியர்கள், வீரர்கள், இரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

எனது கழகத்துக்காக தொடர்ந்து விளையாடுவதற்கான ஒப்பந்த நீட்டிப்பில் நான் சமீபத்தில் கையெழுத்திட்டேன், ஆனால் நான் விரும்பும் கழகத்தில் அவர்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு விளையாட முடியாமல் அவப் பெயரைப் பெற்றுக்கொடுக்க நான் விரும்பவில்லை

போர்பி, ஸ்டூவர்ட் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் எனது முடிவைப் பற்றி மிகவும் புரிந்துகொண்டுள்ளனர். அவர்களின் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33

எனது வாழ்க்கை முழுவதும் நான் பெற்ற அனைத்து உதவி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்கும் நான் நன்றி சொல்ல வேண்டிய பல நபர்களின் பெயர்கள் உள்ளன, ஆனால் எனது மனைவி, குழந்தைகளான ஜோசப் மற்றும் ஜெஸ்ஸி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்காமல் இதை முடிக்க முடியாது. அத்துடன் எனக்கு  ஆதரவாக இருந்த பெற்றோர்கள். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

இறுதியாக, எனது வாழ்க்கையில் நம்பமுடியாத ஆதரவு வழங்கிய அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டு ஓய்வு முடிவை அறிவித்தார்.

இயென் பெல் இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,227 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில் 22 சதஙகளும், 46 அரைச்சதங்களும் அடங்கும்

அதேபோல் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 4 சதங்களுடன் 5,416 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதனிடையே, 311 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 20 ஆயிரம் ஓட்டங்களுக்கும் மேல் குவித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<