“T20I தொடரில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு உலகக்கிண்ணத்தில் வாய்ப்பு” – கிப்சன்

327

இலங்கை அணிக்கு எதிராக இன்று (19) ஆரம்பமாகவுள்ள T20I  தொடரில் சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கலாம் என தென்னாபிரிக்க அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஓட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை – தென்னாபிரிக்க தொடரின் பின்னரான புதிய ஒருநாள் தரவரிசை

இலங்கை அணியை வெள்ளையடிப்பு …..

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 5-0 என முற்று முழுதாக கைப்பற்றியிருந்தது. இந்த ஒரு நாள் தொடரையடுத்து கருத்து வெளியிட்டிருந்த தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ், உலகக்கிண்ண குழாம் 99 சதவீதம் உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். எனினும், ஓரிரு இடங்களுக்கான கலந்துரையாடல்கள் இதுவரையில் இடம்பெற்று வருவதாக கிப்சன் குறிப்பிட்டுள்ளார்.

“உலகக்கிண்ண குழாத்தை T20I  போட்டிகள் மூலம் தெரிவுசெய்வதென்பது சிறந்த முடிவாக இருக்காது. தென்னாபிரிக்க அணியின் பல வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகின்றனர். ஐ.பி.எல். தொடரில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு உலகக்கிண்ண குழாத்தில் இடம் வழங்கப்படமாட்டாது. ஆனால், சர்வதேச T20I போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி, இலங்கைக்கு எதிரான T20I தொடரில் பிரகாசிக்கும் வீரர்கள் உலக்கிண்ண குழாத்தில் இடம்பெற முடியும்” என இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20I போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் கிப்சன் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் வீரர்களின் புகழை வைத்து அவர்களை உலகக்கிண்ணத்துக்கு தெரிவுசெய்ய முடியாது. தற்போது சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி வரும் வீரர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படும். எனினும், ஹசிம் அம்லா தொடர்பில் மாத்திரம் நாம் முடிவு செய்யவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நீண்ட நாட்களாக போட்டிகளில் விளையாடவில்லை. அணி வீரர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். இதுதொடர்பான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும்”

அதேநேரம், புதிய வீரர்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பிலும் கிப்சன் கருத்து வெளியிட்டுள்ளார். “நாம் வேகப்பந்து வீச்சாளர் என்ரிச் நோர்ட்ஜேவை ஒருநாள் தொடரில் அறிமுகப்படுத்தியிருந்தோம். அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரை உலகக்கிண்ண குழாத்தில் தெரிவுசெய்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதேநேரம், ரஸ்ஸி வென் டெர் டஸன் ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்களை குவித்து வருகின்றார். இவ்வாறு புதிய வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி வரும் போது, உலக்கிண்ண குழாத்தை தெரிவுசெய்வதில் அதிகமான அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றது” என்றார்.

இலங்கை அணியை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்க டி20 குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் டி20 தொடரில் …

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20I போட்டியில் தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவுள்ளது. இதன்படி, காகிஸோ ரபாடா, டு ப்ளெசிஸ், இம்ரான் தாஹிர் மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதுடன், அணித்தலைவராக ஜேபி டுமினி செயற்படவுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<