“மாலிங்கவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது“ – ரோஹித் சர்மா

2372
iplt20.com

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் எதிர்வரும் 19ம் திகதி மோதவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன ஆகியோர் இணைய ஊடக சந்திப்பொன்றை இன்று (17) வழங்கியுள்ளனர்.

இந்த நேர்காணலில் அணியின் கட்டமைப்பு தொடர்பில் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில், இம்முறை ஐ.பி.எல். தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ள இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

IPL 2020 தொடரிலிருந்து விலகிய முன்னணி வீரர்கள்

லசித் மாலிங்கவின் இழப்பு குறித்து கருத்தினை பகிர்ந்துக்கொண்ட ரோஹித் சர்மா, “லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் இலங்கை அணிக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. அவருக்கான இடத்தினை மும்பை இந்தியன்ஸ் அணியில் யாராலும் நிரப்ப முடியாது. மாலிங்க ஒரு வெற்றியாளர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கடினமான காலப்பகுதியில் அணியை அதிலிருந்து மீட்டுத்தந்தவர். அவரது அனுபவத்தை நாம் தவறவிடுவதுடன், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கிய பங்களிப்பு எதிர்பார்க்கமுடியாதவை.

நெதன் குல்டர்-நெயில், ஜேம்ஸ் பெட்டின்ஸன் மற்றும் தவல் குல்கரனி ஆகியோர் லசித் மாலிங்கவுக்கு மாற்று வீரராக அணியில் உள்ளனர். ஆனால், மாலிங்க மும்பை அணிக்கு செய்ததை ஏனையவர்களுடன் ஒப்பிட முடியாது என்பதுடன், மாலிங்கவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்றார்.

(2019ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இந்தியா – இலங்கை போட்டியின் போது, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட ரோஹித் மற்றும் மாலிங்க)

அதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, குயிண்டன் டி கொக் மற்றும் க்ரிஸ் லின் ஆகிய முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உள்ள நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்குவது யார் என்பது தொடர்பில் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டார்.

“க்ரிஸ் லின் இந்தமுறை எமது அணிக்கு கிடைத்த நல்ல ஒரு வரவு. ஆனால், ரோஹித் மற்றும் குயிண்டன் ஆகியோர் கடந்த பருவகாலத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையில் சிறந்த இணைப்பு உள்ளதுடன், அனுபவமும் அதிகம். அத்துடன், இருவரும் சிறந்த தலைவர்களாக இருப்பதும், அவர்களுடைய பங்களிப்பு சரியாக அமைந்து வரும் போதும், அதனை நாம் ஏன் உடைத்தெறிய வேண்டும்? அதனால், நாம் இந்த ஆரம்பத்தை தொடருவோம்” என மஹேல தெரிவித்தார்.

Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

அவர் மேலும் குறிப்பிடுகையில், “க்ரிஸ் லின் குழாத்தின் தன்மையை சரியாக வைத்துக்கொள்வதற்கான ஒரு தெரிவு. நாம் அணிக்கு அதிக மதிப்பினை கொடுக்க நினைக்கிறோம். ஒரு முக்கியமான போட்டி வரும் போது, எமது அணியை எதிரணியால் கணிக்க முடியாமல் இருக்க வேண்டும். குயிண்டன் மற்றும் ரோஹித் ஆகியோர் மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்” என்றார்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா கருத்து வெளியிடுகையில், “இந்த காலநிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் மாறுவது சவாலான விடயமாக உள்ளது. எமது குழாத்தில் அதிகமான வீரர்கள் இங்கு விளையாடியதில்லை. எனவே, ஏற்கனவே இங்கு விளையாடிய வீரர்கள் தங்களுடைய அனுபத்தை, அனுபவமில்லாதவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். 

உளவியல் ரீதியாக ஆடுகளத்தின் தன்மையை அறிந்துக்கொண்டு விளையாடினால், சிறப்பாக ஆட முடியும். நாம் ஏற்கனவே, இங்கு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், ஆடுகளத்தில் எப்படி ஆடவேண்டும் என அறிந்துக்கொண்டுள்ளோம். எனவே, ஆடுகளத்தை புரிந்துக்கொள்வதே முக்கியமான விடயம்” என்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<